பிக் பாஸ் ஜூலியின் ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்துக்கு தடை கோரி வழக்கு

 

பிக் பாஸ் ஜூலியின் ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்துக்கு தடை கோரி வழக்கு

பிக் பாஸ் ஜூலி நடித்து வரும் ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்திற்கு தடைக் கோரி அனிதாவின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் ஜூலி நடித்து வரும் ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்திற்கு தடைக் கோரி அனிதாவின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தற்கொலை செய்துக் கொண்டவர் மாணவி அனிதா. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கடந்த 2017ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடினார்.

உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தனது மருத்துர் கனவு கலைந்த விரக்தியில், கடந்த 2017, செப்.1ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆர்.ஜே.பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் மாணவி அனிதவாக ‘ஜல்லிக்கட்டு’, ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அனிதாவின் தந்தை தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், இயக்குநர் அஜய் தங்கள் கிராமத்துக்கு வந்ததில்லை என்றும், அனிதா பற்றி எந்த குறிப்பும் இல்லாமல், அனிதாவின் பெயரை தவறாக பயன்படுத்தி இந்த படத்தை எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த படத்தை எடுக்கவும், விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்றும், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கு குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான அஜய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் நவ.22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.