கல்வான் மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்தது உண்மை தான் – ஒப்புக்கொண்ட சீனா!

 

கல்வான் மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்தது உண்மை தான் – ஒப்புக்கொண்ட சீனா!

இந்திய-சீன எல்லைப் பகுதியில் தற்போது நிலவிவரும் பதற்றநிலைக்கு கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு நடைபெற்ற மோதல் சம்பவமே காரணம். கடந்தாண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் மிகப் பயங்கரமான மோதல் உண்டானது. மோதலின்போது துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விடுத்து கற்களைக் கொண்டு சீன ராணுவத்தினர் தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.

இதனை சர்வதேச அரங்கில் 20 வீரர்கள் மரணமடைந்ததாக இந்தியா ஒப்புக்கொண்டது. ஆனால் சீன தரப்பில் எதுவும் கூறப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. இருப்பினும், சீன வீரர்களில் 45 பேர் உயிரிழந்ததாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலவின.

இது சீன தரப்பில் மறுக்கப்பட்டது. இச்சூழலில் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான பீப்புள்ஸ் டெய்லி, கல்வான் மோதலில் நான்கு சீன வீரர்கள் மரணமடைந்ததாக ட்வீட் செய்துள்ளது. ஜி ஜின்பிங் அரசு அந்த நான்கு வீரர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.