குழந்தைகளுக்கும் மன நல பிரச்னை வரலாம்… தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

 

குழந்தைகளுக்கும் மன நல பிரச்னை வரலாம்… தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

மனநல பிரச்னை என்பது பெரியவர்களுக்கு மட்டும் வரக்கூடியது என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் மன நலம் என்பது உடல் நலம் போலவே எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்தியாவின் 12 சதவிகித குழந்தைகள் நடத்தை (பிஹேவியர்) தொடர்பான பிரச்னை உள்ளவர்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 95 சதவிகிதம் குழந்தைகளுக்கு சரியான மருத்துவ, மனநல உதவி கிடைப்பது இல்லை என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.

குழந்தைகளுக்கும் மன நல பிரச்னை வரலாம்… தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

மனப் பதற்றம், மன அழுத்தம், கவனக் குறைவுடன் கூடிய ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய மன நல பாதிப்புகள் ஆகும். குழந்தைகள் சொல்லும், வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை வைத்து அவர்களுக்கு மனநல பிரச்னை உள்ளது என்பதை பெற்றோர் அடையாளம் காண முடியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

அடிக்கடி தலைவலிக்கிறது, வயிறு வலிக்கிறது என்று குழந்தை சொல்கிறது என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். மனப் பதற்றம் அதிகரிக்கும் போது அது தூக்கமின்மை, வயிறு வலி, கவனக் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் அடிக்கடி வயிறு வலி, தலைவலி என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அதைப் புறக்கணிக்காமல் என்ன பிரச்னை என்று பாருங்கள்.

ஒரு குழந்தை அதீத பயம் மற்றும் அழுகையை வெளிப்படுத்துகிறது என்றால் அதற்கு மனப் பதற்றம், மனதில் அதிகமாக எழும் கோபம், சோகம், சங்கடம், வெறுப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம். இவை தொடர்ந்தால் மனதளவில் அவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலேயே பிரச்னையை தீர்ப்பது நல்லது.

சொல் பேச்சு கேளாமை, ஒத்துழையாமை கூட ஒரு வகையான அறிகுறிதான். நாம் ஒன்றைச் சொன்னால் அதை கேட்காமல், கீழ்ப்படியாமல் அதை செய்ய மறுப்பது, செய்ய மறுக்க புது புது காரணம் கூறுவது என்று இருந்தால் அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும். முடியாதபட்சத்தில் மனநல மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.

திடீரென்று பாடங்களில் மதிப்பெண் குறைவது, படிப்பில் ஆர்வம் குறைகிறது என்றால் எதனால் இப்படி ஆகிறது என்று பார்க்க வேண்டும். இது மன அழுத்தம், பதற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம். எதனால் அவர்களுக்கு கவலை, எதைக் கண்டு அவர்களுக்கு பயம் என்று அவர்களுடன் பேசி தெரிந்துகொண்டு அதை சரி செய்ய முயல வேண்டும்.

திடீரென்று சாப்பிடுவதை குறைப்பது, எப்போது கேட்டாலும் பசி இல்லை என்று கூறுவது, அல்லது அதிகமாக சாப்பிடுவது இருந்தால் அதை கவனிக்க வேண்டும். இதை உடல் நல பிரச்னையாக மட்டும் பார்க்காமல் மன நல கண்ணோட்டத்தில் அணுகினால் தீர்வு கிடைக்கும்!