கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி வரும் 4 ஆம் தேதி சிவகங்கை செல்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. கடந்த ஏழு மாத காலமாக கொரோனா பரவலை கருத்தில்கொண்டு ஊரடங்குதளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான ஊரடங்கு நாளையுடன் முடிகிறது.

இதுவொருபுறமிருக்க கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் அங்கு நலத்திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். இதனால் சென்னையில் இருந்து நான்காம் தேதி மதுரைக்கு செல்லும் முதல்வர், முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் . இதையடுத்து அவர் சிவகங்கை சென்று அங்கு உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது