2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதல்வர் ஈபிஎஸ்

 

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதல்வர் ஈபிஎஸ்

சேலம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 11 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர், சேலம் அரசு மருத்துவமனையில் இன்று கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதல்வர் ஈபிஎஸ்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதுமான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார்.