`தொண்டையில் சிக்கிய சிக்கன் துண்டு; பறிபோன குழந்தையின் உயிர்!’- கோவையில் நடந்த சோகம்

 

`தொண்டையில் சிக்கிய சிக்கன் துண்டு; பறிபோன குழந்தையின் உயிர்!’- கோவையில் நடந்த சோகம்

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை மல்லிகா நகர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் காமாட்சி (30)- பின்கி (28) தம்பதியின் மகன் கபிலேஷ் (4). ஆறு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பின்கி வடவள்ளியில் லிங்கேஷ் என்பவருடன் வேம்பு அவன்யூ பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது குழந்தைக்கு சிக்கன் துண்டுகளை கொடுத்துள்ளனர் பின்கி. அந்த சிக்கன் குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் பின்கி. அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தை உயிரிழந்தான். இந்த நிலையில், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வடவள்ளி காவல் நிலையத்தில் தந்தை காமாட்சி புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் குழந்தையின் உடலை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

ஆசையாய் சிக்கன் சாப்பிட்டபோது அது தொண்டையில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.