வடபழனி பிணவறையிலிருந்து வெளியேறும் புகைமண்டலம்? கண்டுகொள்ளாத மாநகராட்சி!

 

வடபழனி பிணவறையிலிருந்து வெளியேறும் புகைமண்டலம்? கண்டுகொள்ளாத மாநகராட்சி!

தேர்தல் பிஸியில் அரசியல்வாதிகள், பரப்புரை பரப்பரப்பில் வேட்பாளர்கள் என ஏப்ரல் 6 ஆம் தேதியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது தலைவர்களின் நகர்வுகள். தொகுதியில் என்ன பிரச்னை இருக்கிறது என்றே தெரியாத அரசியல் கட்சியினர், மக்களின் மனங்களை கவரவும், எதிரணியை வீழ்த்தவும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றன. இந்த சூழலில் வடபழனியில் கடந்த ஒருவாரமாக மயானப்புகையுடன் வாழ்க்கை நடத்திவருகின்றனர் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.

வடபழனி பிணவறையிலிருந்து வெளியேறும் புகைமண்டலம்? கண்டுகொள்ளாத மாநகராட்சி!

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் எரிவாயு தகன மேடையில் உள்ள புகை வெளியேறும் கூண்டு பழுதடைந்ததால் பிணம் எரிக்கும்போது வெளியேறும் புகை அப்பகுதியிலுள்ள குடியிருப்பு முழுவதையும் சூழ்ந்துள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் சுவாசிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு துர்நாற்றமும், மூச்சு திணறல் பிரச்னைக்கும் ஆளாக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். வழக்கமாக அந்த பிணவறையில், பிணம் எரிக்கப்படும்போது அதி உயரத்தில் இருக்கும் புகைகூண்டு வழியாக புகையானது வெளியேறிவிடும். ஆனால் கடந்த ஒருவாரமாக புகைக்கூண்டு பழுதடைந்ததாக கூறும் பிணவறை ஊழியர்கள், சடலங்களை வெளியில் எரிப்பதால் காற்றில் கலந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறுவதாக கூறுகின்றனர் ஏவிஎம் சுடுகாட்டிற்கு அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள்.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரப்புரைக்காக அந்தவழியை கடந்து செல்லும் அரசியல் வாதிகளுக்கு கூடவா இந்த அவலம் தெரியவில்லை? என்ற கேள்வி எழுகிறது.