தினமும் 2 பேர்தான் வறாங்க… கடனால் தவிக்கிறோம்… நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை!‍- கண்ணீர் விடும் சலூன் உரிமையாளர்கள்

 

தினமும் 2 பேர்தான் வறாங்க… கடனால் தவிக்கிறோம்… நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை!‍- கண்ணீர் விடும் சலூன் உரிமையாளர்கள்

“வாடகைக் கூட கட்ட முடியாமல் கடன் மேல் கடன் வாங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். அரசு அறிவித்துள்ள நிவாரணம் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள பலருக்கும் இன்னும் கிடைக்கவில்லை” என்று வேதனை தெரிவிக்கின்றனர் சலூன் உரிமையாளர்கள்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 24-ம் தேதி முதல் நகர்ப்புறங்களில் ஏசி இல்லாத முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்களை திறக்கப்பட்டன. இவைகள் திறக்கப்பட்டு 2 மாதங்களாகி விட்டன. ஆனாலும் பொது முடக்கத்தின் பாதிப்பு குறைந்தபாடில்லை. தினமும் 20 – 30 வாடிக்கையாளர்கள் வந்த நிலையில் 2 – 3 பேர் மட்டுமே வருகிறார்கள். பலரும் தங்களது வீடுகளிலேயே முடித் திருத்தம் செய்து கொள்கிறார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் சலூன் உரிமையாளர்கள்.

இதனால் வருமானமின்றி, சக தொழிலாளருக்கு ஊதியம், பராமரிப்பு செலவு, கடை வாடகைக் கூட கட்ட முடியாமல் கடன் மேல் கடன் வாங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் முடித்திருத்தும் நிலையங்களை வைத்திருப்போர்.

தினமும் 2 பேர்தான் வறாங்க… கடனால் தவிக்கிறோம்… நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை!‍- கண்ணீர் விடும் சலூன் உரிமையாளர்கள்
“தமிழ்நாடு முழுவதும் முடி திருத்தும் நிலையம் நடத்துவோர் & தொழிலாளர்கள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தொழிலில் உள்ளனர். கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிந்து, அடிக்கடி கிருமி நாசினி தெளிப்பு உட்பட வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டாலும் பெரும்பான்மையான இடங்களில் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனாலும் கொரோனா அச்சத்தின் காரணமாக சலூன்களுக்கு வர பலரும் தயங்குகிறார்கள். இது தேவையற்ற அச்சம். இங்கு பாதுகாப்பாகவே பணி செய்கிறோம். ஆனாலும், 10 % வாடிக்கையாளர்கள் கூட வராத நிலையில், அழகு நிலையங்கள், முடித்திருத்தும் நிலையங்களை வைத்திருந்த பலர் கட்டுமான வேலை முதல் அன்றாடம் கிடைக்கும் தினக்கூலி வேலைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்” என்கிறார் தமிழ்நாடு மருத்துவர்கள் & முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் திருச்சி மாநகர செயலாளர் தர்மலிங்கம்.

“முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ₹ 2 ஆயிரம் நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். இது பெரும் உதவியாக இருக்கிறது. ஆனால், இந்த நிவாரணம் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள பலருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.