தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

 

தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை

சென்னை போரூர் அருகே மின்கசிவு காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல்,
மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் முதல் தளத்தில் வீட்டுக்கடன் கொடுக்கும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மதியம் அந்த அலுவலகத்தின் வழியாக கரும்புகை வெளியேறி உள்ளது. அதனை தொடர்ந்து அலுவலகத்திற்குள் தீப்பற்றி எரிய தொடங்கியது.

தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

இதனை கண்ட, அந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் கடை உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பூந்தமல்லி, ராமாபுரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். அலுவலகம் மூடியிருந்ததால், கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வரும் நிலையில், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.