போலி ஏஜென்சி நடத்தி மோசடி!- கில்லா பெண் அமுலை தேடும் சென்னை போலீஸ்

 

போலி ஏஜென்சி நடத்தி மோசடி!- கில்லா பெண் அமுலை தேடும் சென்னை போலீஸ்

போலி ஏஜென்சி நடத்தி இதை வெப்சைட்டில் பதிவு செய்து வீட்டு வேலை தேடும் பலரை ஏமாற்றி மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வீட்டு வேலை, தோட்ட வேலை உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்வதற்கு ஆட்களை நியமிக்க சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மேன் பவர் ஏஜென்சிகள் செயல்படுகின்றன. இதில் போலி ஏஜென்சிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இப்படி ஒரு போலி ஏஜென்சி நிறுவனத்தின் மூலம் தனது மோசடியை நிகழ்த்தியுள்ளார் அமுல் என்ற பெண்.

அமுல் மேன் பவர் ஏஜென்சி, ரோஜா மேன்பவர் ஏஜென்சி, மகேஸ்வரி மேன்பவர் ஏஜென்சி என பல பெயர்களில் ஜஸ்ட் டயல், சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் பதிவு செய்து வைத்துள்ளார் அமுல். இந்த வெப் சைட்டை பார்த்து அவரை தொடர்பு கொள்ளும் பெண்களிடம் சம்பளம், பணி நேரம் குறித்து பேசுவதோடு, 4 ஆயிரத்து 500 ரூபாய் உங்களுக்கு சம்பளம் என கூறிக் கொண்டு பணத்தை கறந்து விட்டு தலைமறைவாகி விடுவாராம். பணத்தை இழந்தவர்கள் காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

போலி ஏஜென்சி நடத்தி மோசடி!- கில்லா பெண் அமுலை தேடும் சென்னை போலீஸ்
மோசடி பெண்ணால் ஏமாந்த அசோக்

இந்த நிலையில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவர் இப்படி பணத்தை இழந்துள்ளார். இது குறித்து நீலாங்கரை காவல்துறையில் அவர் அளித்த புகார் மனுவில், அமுல் என்கிற மோசடி பெண்ணால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் ஏமாற்றப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க அதற்கான ஆதாரங்களையும் திரட்டி அளித்துள்ளார். இந்த புகாரை விசாரிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர் காவல்துறையினர். இதையடுத்து, அடையாறு துணை ஆணையர் விக்ரமனை சந்தித்து முறையிட்டுள்ளார் அசோக். அவரது உத்தரவின்பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, வீட்டு வேலை, அலுவலகங்களில் யாரை பணி அமர்த்தினாலும் அவர் குற்றப்பின்னணி உள்ளவரா? என்றும் காவல்துறையினரிடம் நன்னடத்தை சான்றுள்ளவரா என்றும் இது போன்ற நபர்களை பணிக்கும் அனுப்பும் நிறுவனங்கள் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.