செங்கல்பட்டு எஸ்.பி கண்காணிப்பில் விசாரணை!- செய்யூர் சசிகலா வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

 

செங்கல்பட்டு எஸ்.பி கண்காணிப்பில் விசாரணை!- செய்யூர் சசிகலா வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்யூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா (24) என்பவர் ஜூன் 24-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி தேவேந்திரன், அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் தனது தங்கையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக செய்யூர் காவல் நிலையத்தில் சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார். இதனிடையே, சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்துவைத்து, அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, சசிகலாவின் தோழிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டனர்.

இந்த நிலையில், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி, சசிகலாவின் தயார் சந்திரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சசிகலா மரணம் தொடர்பான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முறையாக நடைபெறவில்லை. இருவர் மீதும், தன் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்திலோ வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் காவல்துறையின் முயற்சி ஆகும். இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கும் போதிய முகாந்திரம் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

தொடக்கத்தில், இந்த வழக்கு தற்கொலை வழக்காகவும், தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக புருசோத்தமன், தேவேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செய்யூர் காவல்நிலையமே தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ள அனுமதி அளித்தார். மேலும், வழக்கின் விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்காணிப்பில் நடத்த வேண்டும். காவல்துறையின் விசாரணைக்காக சசிகலாவின் உறவினர்கள் செய்யூர். காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.