இரட்டை கொலை வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டும் – நீதிபதிகள் பாராட்டு

 

இரட்டை கொலை வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டும் – நீதிபதிகள் பாராட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளம் என்னும் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களில் பலத்த காயம் இருந்ததும், பிறப்புறுப்பில் அவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் வழக்கை சிபிசிஐடி போலீசார் உடனடியாக கையிலெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இரட்டை கொலை வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டும் – நீதிபதிகள் பாராட்டு

நீதி மன்ற உத்தரவின் படி, 10 குழுக்களாக பிரிந்த சிபிசிஐடி போலீசார் இந்த கொலை தொடர்பாக பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சாத்தான்குள இரட்டை கொலை வழக்கில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையை சிபிசிஐடி நடவடிக்கை தந்துள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதற்கு நீதிபதிகள் சிபிசிஐடிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.