அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்க்கிறது. டெல்லியில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மழை 4ஆம் தேதி வரை தொடரும் என்பதால் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரபிக் கடல் பகுதிகளில் செப்டம்பர் 6ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.