நீலகிரியில் அதிகனமழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

நீலகிரியில் அதிகனமழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நேற்று முன் தினம் கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் அதிகனமழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் இன்னும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. அதனால், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 283 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்கவும் 500 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கொண்ட பேரிடர் குழு சென்னையில் இருந்து வரவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க கடற்கரை அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.