ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ராகுல் காந்தியிடமும் நன்கொடை கேட்போம்… விஷ்வ இந்து பரிஷத் தகவல்

 

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ராகுல் காந்தியிடமும் நன்கொடை கேட்போம்… விஷ்வ இந்து பரிஷத் தகவல்

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ராகுல் காந்தி உள்பட அனைவரிடமும் நன்கொடைக்காக அணுகுவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய துணை தலைவர் சம்பத் ராய் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று ஸ்ரீராம ஜென்மபூமியில் நடந்த பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். இதனையடுத்து இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. உள்நாட்டில் பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியை பயன்படுத்தி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படப்பட உள்ளது.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ராகுல் காந்தியிடமும் நன்கொடை கேட்போம்… விஷ்வ இந்து பரிஷத் தகவல்
ராமர் கோயில் மாதிரி

பொது மக்களிடம் நன்கொடை வாயிலாக நிதி திரட்டுவது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய துணை தலைவரும், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொது செயலாளருமான சம்பத் ராய் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2021 ஜனவரி 15ம் தேதி முதல் அர்ப்பணிப்பு பிரச்சாரம் தொடங்குகிறது. விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் நாடு முழுவதுமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று 12.25 கோடி வீடுகளுக்கு செல்வார்கள். நாங்கள் எங்கள் தொண்டர்களுக்கு எந்தவொரு பிரிவினை கோட்டையும் வரையவில்லை.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ராகுல் காந்தியிடமும் நன்கொடை கேட்போம்… விஷ்வ இந்து பரிஷத் தகவல்
சம்பத் ராய்

நாங்கள் எல்லோரிடமும் செல்வோம். ராகுல் காந்தியிடமும் நன்கொடைக்காக அணுகுவோம். ஒரு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தானும் பங்களிக்க விரும்புவதாக கூறினாலும், நாம் அவருடைய பங்களிப்பை மரியாதையுடன் எடுத்துக்கொள்வோம் என்று எங்கள் தொண்டர்களிடம் கூறியுள்ளோம். இது உலகின் மிகப்பெரிய மக்கள் தொடர்பு பிரச்சாரமாக இருக்கும். இது முற்றிலும் சமூக மக்கள் தொடர்பு பிரச்சாரமாக இருக்கும். இதில் எந்த அரசாங்க அமைப்புகளும் பயன்படுத்தப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.