ஆசிரியையிடம் செயின் பறிப்பு : பட்ட பகலில் இளைஞர்கள் கைவரிசை!

 

ஆசிரியையிடம் செயின் பறிப்பு : பட்ட பகலில் இளைஞர்கள் கைவரிசை!

நாகர்கோவில் அருகே ஆசிரியையிடம் 4 1/2 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சேம் பிளாரன்ஸ் (53). அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரரின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்ததால் பெங்களூரு சென்றிருந்த இவர், இன்று காலை பேருந்தில் மீண்டும் பண்ணை பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார். அங்கிருந்து, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

ஆசிரியையிடம் செயின் பறிப்பு : பட்ட பகலில் இளைஞர்கள் கைவரிசை!

அப்போது பைக்கில் ஆசிரியையை பின்தொடர்ந்த 2 இளைஞர்கள், அவர் அணிந்திருந்த 4 1/2 சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆசிரியை பிளாரன்ஸ் அங்கேயே கத்தி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் பிளாரன்ஸிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தனது செயினை 2 இளைஞர்கள் அறுத்துக் கொண்டு சென்றதாக பிளாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களுடன் காவல் நிலையம் சென்ற பிளாரன்ஸ், செயின் பறிப்பு குறித்து புகார் அளித்துள்ளார். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதனிடிப்படையில், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நாகர்கோவில் அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நர்ஸ் ஒருவரின் 7 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.