அன்பு, ஈகை நிறைந்த ரமலான் திருநாள்!

 

அன்பு, ஈகை நிறைந்த ரமலான் திருநாள்!

கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று தொடங்கிய மிகக் கடுமையான நோன்பு முடிவுக்கு வந்துவிட்டது. இன்று (மே 14) இஸ்லாமியர்கள் நோன்பை நிறைவு செய்யும் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஐந்து கடமைகளுள் ஒன்றான ஒரு மாதம் முழுக்க நோன்பு இருக்க வேண்டும் என்ற தங்கள் கடமையை நிறைவேற்றியதை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமியர்களின் 10வது மாதமான ஷவ்வாலின் முதல் மூன்று நாட்களில் நோன்பு நிறைவு செய்யும் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ரம்ஜான் இன்று (மே 14, 2021) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். கேரளா, கன்னியாகுமரியில் ஏற்கனவே நேற்று ரமலான் கொண்டாடப்பட்டுவிட்டது.

அன்பு, ஈகை நிறைந்த ரமலான் திருநாள்!

இன்றைய நாளில் இஸ்லாமியர்கள் இறைவழிபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்தால், குடும்பத்தினர், நண்பர்களை சந்திப்பது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வது, பரிசுகள் வழங்குவது, தர்மம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய மாதங்களுள் ஒன்று ரம்லான். இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் இந்த ரம்ஜான் மாதத்தில்தான் முதலில் வெளிப்பட்டது. எனவே இது மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் கடுமையான நோன்பு இருப்பார்கள். சஹர் எனப்படும் அதிகாலை உணவைக் காலை 4 மணிக்குள் சாப்பிடுவார்கள். அதன்பிறகு மீண்டும் மாலை இஃப்தார் எனப்படும் நோன்பு திறப்பின்போதுதான் உணவு கொள்வார்கள். இடைப்பட்ட நேரத்தில் தண்ணீரோ, எச்சிலோ கூட விழுங்க மாட்டார்கள்.

அன்பு, ஈகை நிறைந்த ரமலான் திருநாள்!

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ரமலான் நோன்பு இருத்தல் என்பது 4வது கடமையாகும். நோன்புடன் புனித திருக்குரானைப் படிப்பதும் குரானை மற்றவர்களுக்கு அறிவிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சொர்கத்தின் வாசல் திறக்கப்படுகிறது, நரகத்தின் வாசல் மூடப்படுகிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். ரம்ஜான் தினத்தன்று கடந்த 30 நாட்கள் நோன்பிருந்து சேமித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமியர்கள் வழங்கி மகிழ்கின்றனர். இதனாலேயே ஈகைத் திருநாள் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.

நான்காவது கடமையைச் சிறப்பாக நிறைவு செய்ததன் கொண்டாட்டமாக, இன்றைய தினம் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து, புத்தாடை அணிந்து காலை வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் பரிமாறப்படும். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலத்தில் வீடுகளிலிருந்தபடியே வழிபாடு நடத்த இஸ்லாமியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் நல் வாழ்த்துக்கள்!