darbar
  • January
    25
    Saturday

Main Area

Mainகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-2


மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் பொன்னி எனும் காவிரி ஆறு இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.

இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் "காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

 

அத்தியாயம் - 2

சதுக்க பூதங்களும்...சம்பாபதி அம்மனும்...பாராமுகம் காட்டும் பக்தர்கள்!!

பூம்புகார் நகரம் கடற்கோளால் அழிந்துபோய் 2000 வருடங்களுக்கும் மேலாகிறது. அன்றைய நாகரீகத்தின் அடையாளமாய் இன்றைக்கும் கம்பீரமாய் காட்சியளிக்கிறாள் சம்பாபதி அம்மன். அவள் கோவில் அருகிலேயே மக்களுக்கு தீங்கு செய்பவர்களைப் பார்த்து ஆங்காரமாக ஓலமிட்டபடி அடித்து உண்ணும் சதுக்க பூதங்களும் நிற்கின்றன.

கோவலனின் காதலி மாதவியின் குலதெய்வம் சம்பாபதி என்று சொல்கிறது சிலப்பதிகாரம். சம்பாபதியின் கோவிலுக்கு ’குச்சரக் குடிசை’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த கோவிலுக்கு அருகில் தான் அப்போதைய காவிரிப் பூம்பட்டிணத்தின் சுடுகாடும் இருந்துள்ளது.

கடலில் செல்லும் கடலோடிகளை மணிமேகலா தெய்வம் காத்ததுபோல நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கு சம்பாபதி அம்மன் காவலாக இருந்திருக்கிறாள். சனாதன மதங்கள் வலுப்பெறாத அந்தக்காலத்தில் பௌத்தம், சமனம், ஆசிவகம் தவிர இதுபோன்ற குலசாமி கோவில் வழிபாடுகளும் தொன்று தொட்டே இருந்திருக்கின்றன என்பதற்கு சம்பாபதி அம்மனே வரலாற்று சாட்சி.

ஆனால், இப்படியொரு கோவில் இருப்பதே அங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை என்பதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு போகிற சாலையில் இருக்கிறது திருவண்காடு என்கிற சிறிய நகரம்.

அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாயாவனம். அங்குள்ள சாய்காட்டு ஈஸ்வரர் கோவிலுக்கு வலதுபுறம் திரும்பினால் அடர்ந்த தென்னை மரங்கள், மூங்கில் பனை மரங்களுக்கு நடுவே ஒரு ஒத்தையடிப் பாதை போகிறது. அந்த வழியாகப் போனால் ஓங்கி வளர்ந்த தேத்தாங்கொட்டை மரத்துக்கு அடியில் இருக்கிறது பண்டைய சம்பாபதி அம்மன் கோவில். முறையான பராமரிப்பு செய்யப்படாத காரணத்தல் கோவில் இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது.

ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ‘குச்சரக் குடிசை’ என்ற பெயருக்கேற்ப தற்போது சம்பாபதியை ஒரு குடிசையில் குடிவைத்திருக்கிறார்கள். பொய் பேசினால், அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டால், போலி ஆன்மீகம் பேசினால் இந்தப் பூதங்கள் அவர்களை பலி கொண்டிவிடுமாம். இப்படி இளங்கோவடிகளால் பாடப்பட்ட சதுக்க பூதங்களும் சம்பாபதி அம்மனும் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

சம்பாபதி கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் இருந்தும், அறநிலையத்துறை அவளை, சாய்க்காட்டின் துணைக் கோவிலாக்கிவிட்டு, அன்றாடம் நடக்கும் பூஜை கூட ஒரு ஏழை பக்தனின் தயவில்தான் நடக்கிறது.

செங்களும் சதையும் கொண்டு உருவாக்கப்பட்ட சதுக்க பூதங்கள் 2000 ஆண்டு பழமையானவை ஆனால், இந்திய, தமிழக தொல்பொருள் துறைகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டன. அவளது பக்தர்கள் இன்னும் மோசம்.

சம்பாபதியை குல தெய்வமாக வழிபடும் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்போதும் பல்வேறு வெளிநாடுகளில் இருப்பதாக அந்த ஊர் பொதுமக்கள் சொல்கின்றார்கள். அவர்கள் ஆளுக்கு 100 டாலர் கொடுத்தால் கூட சம்பாபதி அம்மன் கம்பீரமாக காட்சியளித்திருப்பாள்.

அரசின் அலட்சியமும்... பக்தர்களின் பாரா முகமும்... இந்த பழம்பெரும் நினைவுச்சின்னங்களைப் பாழ்படுத்திகொண்டிருக்கின்றன.

இது கண்ணகியும், கோவலனும் , மாதவியும் உலவிய மண். வணங்கிய தெய்வம் என்பது தமிழர்களின் நினைவில் இருந்தே அழிந்துவிட்டன.

தொடரும்...

புதையுண்ட பூம்புகார் மீட்கப்படுமா!? காத்திருங்கள் விரைவில்....

2018 TopTamilNews. All rights reserved.