• April
    05
    Sunday

Main Area

Mainகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் -8

ca
ca

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் "காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

அத்தியாயம் 8

ஐரோப்பியர்களை அசரவைத்த தமிழர்கள்

தரங்கம்பாடி கோட்டையும் சென்னை அருகே இருக்கும் சட்ரஸ் கோட்டையும் மட்டுமே தமிழகத்தில் தற்போது மிச்சமிருக்கும் டச்சு கோட்டைகள். பழவேற்காடு உட்பட மற்றவை காலத்தால் அழிந்துவிட்டன.

1620-21 காலக்கட்டத்தில்தான் இந்த கோட்டை கட்டப்பட்டது. கோட்டையில் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட முதல் தளபதி ரென்னிகிஸ் . கோட்டை முழுவதும் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. நான்கு புறம் கொத்தளங்களைக் கொண்ட வெளிப்புற அரணுடன் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி அகழியும், அகழியை கடந்து செல்ல இழுவை பாலமும் அமைக்கப்பட்டிருந்தன.

உள்ளே நுழைந்ததும் முதலில் வீரர்கள் தங்கும் பேரக்ஸ்கள், அதன் பிறகு உணவுக்கிடங்குகள், சமையல் அறைகள், அவற்றுக்கு பின்னால் சிறைக்கூடங்களும் இருந்தன, கீழ் தளங்கள் பொருட்கள் வைக்கும் அறைகளாகவும் மேல் தளத்தில் கவர்னர் மற்றும் அதிகாரிகளின் இருப்பிடங்கள், தேவாலயம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன.

பெரும் வணிகர்களும், கோட்டையின்  பொறுப்பு கேப்டனும் உள்ளேயே தங்கியிருதனர். கிழக்கில் கடலும், தெற்கில் உப்பங்கழியும் பாதுகாப்பாக அமைந்திருந்தன. ஊரின் எல்லைகளை அடையாளப்படுத்தவும் சுங்கத்தீர்வை வசூலிப்பதற்கான இடங்களிலும் நாயக்க மன்னரின் இலச்சினை பொறித்த கற்கள் நடப்பட்டிருந்தன.

கி.பி. 1646-ல் கோட்டைக்கு மேற்கே 300 மீட்டர் தொலைவில் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டது. 1650-ல் தரங்கம்பாடி நகரமாக வளர்ச்சி பெற்றது. விஜயராகவ நாயக்கர் காலத்தில் தஞ்சை நாயக்க அரசு நலிவடைய தொடங்கியதை டச்சுக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள். நாயக்கர்களிடமிருந்து மாரட்டியர் கைக்கு தஞ்சை அரசு கைமாறிய பிறகும் இதே நிலை நீடித்ததால் டச்சுக்காரர்களுக்கு தரங்கம்பாடியை சுற்றி 50 மைல் சுற்றளவுக்கு நிலம் கிடைத்தது.

நகரை சுற்றி பெரிய மதிலும் அதற்கு வெளியே அகழியும் அமைத்து அதனை உப்பங்கழியுடன் இணைந்தனர். 17-ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் பெரும் அரண்களுடன் நகரமாக மாறியது தரங்கம்பாடி. 1623-ல் தரங்கம்பாடியில் பீரங்கி இயக்குபவராக பணியாற்றிய ஜான் ஒலேஸ்ஃபான் என்பவரும் இதுபற்றி எழுதி வைத்திருக்கிறார்.

டேனிஷ்காரர்கள் கொடுத்த வரைப்படத்தை கொண்டு இந்திய கொத்தனார்கள்தான் இதனை கட்டினார்கள். ஐரோப்பிய கட்டுமான வேலையாட்களைவிட இந்திய வேலைக்காரர்கள் செய் நேர்த்தியும், நுண்ணறிவும் பெற்றிருந்தார்கள். வேலைகளையும் விரைவாகச் செய்தார்கள் என்று இந்திய தொழிலாளர்களை தன் குறிப்பில் புகழ்ந்து எழுதியிருக்கிறார். அரிசி, பாக்கு, துணி, வெடி உப்பு ஆகியவற்றை விற்கவும் வாங்கவும் செய்தனர். அடிமை வாணிகத்திலும், கடற்கொள்ளையிலும்கூட ஈடுபட்டனர்.

Escut Pagoda என்ற பெயரில் வெளியிடப்பட்ட நாணயங்களுடன், ஆங்கிலேயர்கள் வெளியிட்ட நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. ஆங்கிலேயர் வெளியிட்டது “கும்பினி பணம்” அல்லது “ மதராஸ் பணம்” என அழைக்கப்பட்டது. டட்ச் பணம் “புதிய சக்காட்டு வராகன்” என்று சொல்லப்பட்டது. டேனிஷ்காரர்கள் காலத்தில் தரங்கம்பாடி பரபரப்பான துறைமுகமாக விளங்கியது. பெரிய கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவதற்கு வசதியான ஆழத்துடன் இருந்ததால் நாகப்பட்டினத்திற்கு போகும் கப்பல்கள் இங்கே இடை நிறுத்தப்பட்டன.

இதனால் நகரில் வணிகம் சிறப்புற்றது. ஐரோப்பியர்கள் கோட்டைக்குள்ளும் இந்தியர்கள் கோட்டைக்கு வெளியிலும் தங்கினர். மக்கள் தொகை அதிகமானதும் டச்சுக்காரர்கள் உள்ளூர் மக்களிடையே ஏற்படும் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அமைத்தனர். அந்த நீதிமன்றங்களிலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மக்களுக்கென அவரவர் மதத்தை சார்ந்த நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களின்  கை ஓங்கும்வரை டச்சுக்காரர்களின் வணிகம் நன்றாகவே நடந்திருக்கிறது.

திப்பு சுல்தானுக்கு எதிராக ஆற்காடு நவாப்புக்கு ஆயுதங்கள் விற்றதால் திப்பு சுல்தான் தரங்கம்பாடியை முற்றுகையிட்டு 1,40,000 வராகன் அபராதமாக பெற்று போயிருக்கிறான். இதன் தொடர்ச்சியாக ஆங்கிலேயர்கள் திப்புவை வென்ற பிறகு 1807-ல் டச்சுக்காரர்களிடம் இருந்து தரங்கம்பாடியை கைப்பற்றி ஏழு வருடங்களக்கு பிறகு திருப்பி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் கோபன் கேஹனில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்காளப்பகுதியில் இருந்த ஒரு டச்சுக்காலனியையும் பெற்றுக்கொண்டு, 1814-ல் மீண்டும் தரங்கம்பாடியை டச்சுக்காரர்களிடமே ஒப்படைத்துவிட்டனர்.

1868-ல் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் பாதை அமைந்தவுடன்,நாகப்பட்டினம் வளர்ச்சி பெற்றதால் தரங்கம்பாடி நலிவுற்றது. 1620-ல் நான்காயிரம் ரூபாய் குத்தகைக்கு வாங்கிய தரங்கம்பாடியை 1845-ல் 12,50,000 ரூபாய்க்கு ஆங்கிலேயர்களிடம் டச்சுக்காரர்கள் விற்றுவிட்டார்கள். 1845 முதல் 1860 வரை தஞ்சை மாவட்டத்தின் தலைநகரமாகவும் தரங்கம்பாடி இருந்திருக்கின்றனது. 1860-ல் தஞ்சை தலை நகரமாக மாறிய பிறகு தரங்கம்பாடி தன் பொலிவிழந்து இப்போதுள்ள சிறு கிராமமாக சுருங்கிவிட்டது.

தொடரும்....

கேட் வே ஆஃப் கிரிஸ்டியானிட்டி

2018 TopTamilNews. All rights reserved.