சில விநாடிகளில் உயிரைப் பறிக்கும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம்… தடுக்க வழி உள்ளதா?

 

சில விநாடிகளில் உயிரைப் பறிக்கும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம்… தடுக்க வழி உள்ளதா?

சமூக ஊடகங்களில் நன்றாக பேசிக்கொண்டு, விளையாடிக் கொண்டு இருப்பவர்கள் திடீரென்று மயங்கி சரிந்து விழுந்து உயிரிழப்பது தொடர்பான பல வீடியோக்களை பார்த்திருப்போம். மனித உயிர் ஒரு சில விநாடிகளில் பிரியும் அந்த காட்சிகள் அதிர்ச்சியைத் தரும் வகையில் இருக்கும். இது ஏன் நிகழ்கிறது என்ற பலருக்கும் புரிவது இல்லை. மாரடைப்பு என்று சிலர் இதை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். இது திடீர் இதயத்துடிப்பு முடக்கம் காரணமாக ஏற்படும் உயிரிழப்பாகும்.

சில விநாடிகளில் உயிரைப் பறிக்கும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம்… தடுக்க வழி உள்ளதா?

நம்முடைய இதயம் துடிக்க மின்சார ஆற்றல் தேவை. இதயம் துடித்தால்தான் ரத்தம் உடல் முழுக்க கொண்டு செல்லப்படும். இதயத்தில் சைனஸ் நோட் என்ற இடத்தில் மின்சாரம் உற்பத்தியாகி அது இதயம் முழுக்க பாயும். இதன் காரணமாகத்தான் இதயம் துடிக்கிறது. இந்த மின் உற்பத்தி திடீரென்று நின்றுபோகும்போது இதயத்துடிப்பு நின்றுவிடுகிறது.

இப்படி சரிந்து விழுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. பல படங்களில் இதய  பிரச்னை என்றால் அயர்ன் பாக்ஸ் போல இரண்டை நெஞ்சில் வைப்பார்கள் பார்த்திருக்கின்றீர்களா… சிவாஜி படத்தில் ரஜினியின் உயிரை காப்பாற்ற ரகுவரன் ரஜினியின் நெஞ்சில் வைத்து அழுத்துவார் தெரியுமா… அதற்கு டீஃபிப்ரிலேட்டர் (defibrillator) என்று பெயர். இதன் மூலம் செயற்கையான முறையில் சைனஸ் நோட் தூண்டப்படும். இதற்கு சைனஸ் நோட் ஒத்துழைத்தால் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்கும். ஆனால், இதய முடக்கம் காரணமாக மயங்கி விழுபவர்கள் அனைவர் அருகிலும் டீஃபிப்ரிலேட்டர் இருப்பது இல்லை. இதனால் ஒரு சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்துவிடுகிறது.

திடீரென்று மயங்கி சரிவது, நாடித் துடிப்பு இல்லாதது, சுவாசம் நின்று போவது, சுய நினைவு இழத்தல் போன்றவை இருந்தால் அது சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.

சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு முன்பு சிலருக்கு நெஞ்சு வலி, சுவாசித்தலில் சிரமம், சோர்வு, இதயம் வேகமாகத் துடிப்பது, இதயத்தில் எடை அதிகரித்தது போன்ற உணர்வு இருந்தால் உடனடியாக இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மருத்துவமனையில் டீபிப்ரிலேட்டர் இருக்கும் என்பதால், திடீர் முடக்கம் ஏற்பட்டாலும் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

டீபிப்ரிலேட்டர் இல்லாத சூழலில் அவர்களுக்கு சி.பி.ஆர் என்ற முதலுதவியை வழங்கலாம். இதற்கு முதலுதவி அளிப்பவருக்கு சி.பி.ஆர் மற்றும் இதர முதலுதவிகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் பள்ளிகளிலேயே முதலுதவி செய்வது எப்படி என்று கற்றுத் தரப்படுகிறது. நம் ஊரில் முதலுதவி செய்யத் தெரியாததால் உதவி செய்வதாக நினைத்து மற்றவர்கள் செய்யும் தவறுகள் பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்புக்கு காரணமாகிவிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் இறப்பைத் தவிர்க்க ஒவ்வொருவரும் சி.பி.ஆர் முதலுதவியை கற்றுத் தெரிந்துகொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்!