நீட் தேர்வையும் ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது போல நீட் தேர்வையும் ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மார்ச் மாதத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட, மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களிலும், மாநகரப்பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை சீரடையும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் தெரியாததாலும், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாலும் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்ததை அடுத்து இந்த முடிவை சி.பி.எஸ்.இ வாரியம் எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் ஜூலை 26-ம் தேதி நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும். ஜூலை மாதம் 15ம் தேதி வரை சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்? இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.
நீட் தேர்வு மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது சாத்தியமற்றது; வேண்டுமானால் நிலைமை சீரடையும் வரை இத்தகைய தேர்வுகளை ஒத்திவைத்து, கொரோனா அச்சம் விலகிய பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வரும் அக்டோபர் & நவம்பர் மாதங்களில் தான் உச்சத்தை அடையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைமை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் நடப்புக் கல்வியாண்டு முடிவுக்கு வந்து விடும். அதன்பின் அடுத்த ஆண்டுக்கான தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற பணிகள் வந்து விடும். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது.

அதுமட்டுமின்றி நீட் தேர்வுகளையும், ஐஐடி தேர்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஐஐடி மாணவர் சேர்க்கை தேசிய அளவிலான தரவரிசையின் அடிப்படையில், மத்திய அரசால் மேற்கொள்ளப் படுவதாகும். பல்வேறு மாநிலப்பாடத்திட்டங்களிலும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சமன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், அந்த சிக்கல்கள் எதுவும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இல்லை. அகில இந்திய ஒதுக்கீடு தவிர்த்த பிற இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை மாநில அளவில் தான் நடைபெறும் என்பதால், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அதை எளிதாக நடத்த முடியும். அதுதான் இன்றைய சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
இதற்கெல்லாம் மேலாக, மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை; தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை. இந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது, 12ம் வகுப்பு மதிப்பெண்களின்படி மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விடாது. எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Most Popular

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29)...

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள்...

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...