மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை : முக ஸ்டாலின் ட்வீட்

 

மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை : முக ஸ்டாலின் ட்வீட்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு செல்வதன் மூலமாக கொரோனா பரவல் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அதனால் அவசரத்தேவைகள் மற்றும் திருமணம், துக்க நிகழ்வுகளுக்காக மட்டுமே மக்கள் மாவட்டத்தை விட்டு செல்ல வேண்டும் என்றும் அதற்காக இபாஸ் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசு அறிவித்தது. இந்த இபாஸ் நடைமுறை கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அமலில் இருந்து வரும் நிலையில், இந்த மாதமும் அது தொடருகிறது. இதனிடையே திருமணம், துக்க நிகழ்ச்சிக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல், பல இடங்களில் போலி இபாஸ் தாயரிப்பது அதிகரித்து வருகிறது.

மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை : முக ஸ்டாலின் ட்வீட்

இதனால் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்க மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி இன்று காலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் மக்களை இன்னல்படுத்தும் இபாஸ் நடைமுறை இனி தேவையில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழகத்தில் #epass நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது. திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள். முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.