அதிக உயிரிழப்பை ஏற்படுத்துமா புதிய வீரியம் மிக்க கொரோனா?

 

அதிக உயிரிழப்பை ஏற்படுத்துமா புதிய வீரியம் மிக்க கொரோனா?

புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் கிருமி புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறது. வீரியம் மிக்க வைரஸ், வேகமாகப் பரவக் கூடிய வைரஸ் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்த வைரஸ் கிருமி அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துமா, யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

அதிக உயிரிழப்பை ஏற்படுத்துமா புதிய வீரியம் மிக்க கொரோனா?

முன்பு முதியவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தற்போது வயது வித்தியாசம் இன்றி போட்டுத் தாக்குகிறது. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது எட்டு மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். தற்போது லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அன்ட் டிராபிக்கல் மெடிசின் நடத்திய ஆய்வில் பழையதைக் காட்டிலும் 33 சதவிகிதம் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதாக இது உள்ளது என்று தெரியவந்துள்ளது.

அதாவது புதிய வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி லண்டன் இம்பீரியல் காலேஜ், ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளிலும் கூட இந்த புதிய வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

70 முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் உயிரிழப்பு 5 சதவிகிதம் அதிகமாகவும், 85 வயதைக் கடந்தவர்கள் மத்தியில் உயிரிழப்பு 7 சதவிகிதம் அதிகமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதிய வீரியம் மிக்க B.1.1.7 வைரஸ் முந்தைய வைரஸ் கிருமியைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்று ஒட்டுமொத்தமாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த புதிய வைரஸ் எல்லா வயதினரையும், எல்லா இனக் குழுவினரையும், ஆண் – பெண் என எந்த பாலினத்தவர் என்ற வித்தியாசம் இன்றியும் பரவுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இந்த புதிய வைரஸ் மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நடுத்தர வயதினர், இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் கூட இந்த வைரஸ் விட்டு வைப்பதில்லை.

இளைஞர்கள் மத்தியிலும் கூட பரவுவதே இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.