சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

 

சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

மனிதர்கள் பேரீச்சம் பழத்தை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டதாக ஆதாரங்கள் உள்ளன. இன்றைக்கும் பேரீச்சம் பழத்தை சுவைக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது என்ற அளவுக்கு பேரீச்சம் பழம் பயன்பாடு உள்ளது. ஊட்டச்சத்துக்கள், நல்ல கார்போஹைட்ரேட் நிறைந்தது பேரீச்சம் பழம். அதிக இனிப்புச் சுவை காரணமாக சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிட பயப்படுகின்றனர். சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதே அவர்களின் பயமாக உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2ல் இருந்து 3 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பிரச்னையே இல்லை என்று சொல்கின்றனர் மருத்துவர்கள். அதே நேரத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடும்போது மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளின் அளவை சற்றுக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

100 கிராம் பேரீச்சம் பழத்தில் 314 கலோரி உள்ளது. சர்க்கரை நோயாளி 7 முதல் 10 பேரீச்சம் பழம் சாப்பிட்ட பிறகும் கூட அவரது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென்று உயர்வது இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு பழத்தில் தோராயமாக 2 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. அதாவது ஒரு நாள் தேவையில் எட்டு சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது. இது பேரீச்சம் பழத்தில் இருந்து கிடைத்த கலோரியை ரத்தத்தில் உடனடியாக கலப்பதைத் தடுக்கிறது. அதனால்தான், 7-8 பழம் சாப்பிட்டும் கூட சர்க்கரை அளவு அதிகரிப்பது இல்லை.

பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ, கே, பி, மக்னீஷியம், மாங்கனீசு, நியாசின், இரும்பு, தாமிரம் பொட்டாசியம் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, ஒரு நாளைக்கு 2-3 என்ற அளவில் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மையாகவே அமையும்.

இதன் கிளைசமிக் இன்டக்ஸ் அளவும் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக இதை மாற்றியுள்ளது. ஒரு உணவின் கிளைசமிக் இன்டக்ஸ் (ஜி.ஐ) எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்பது அடங்கியுள்ளது.

55க்கு கீழ் ஜி.ஐ அளவு உள்ள உணவுகள் எல்லாம் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்யாது. பேரீச்சம் பழத்தின் ஜி.ஐ எண் 42. இது பேரீச்சம் பழத்தில் இருந்து கிடைக்கும் சர்க்கரை சத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இதனால், திடீரென்று சர்க்கரை அளவு உயரும் பிரச்னை இதில் இல்லை.

பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீஷியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் மக்னீஷியம் அளவு குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அந்த குறையைப் பேரீச்சம் பழத்தில் இருந்து கிடைக்கும் மக்னீஷியம் போக்கிவிடுகிறது.

எனவே அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழுங்கள்!