வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்… மனிதர்களுக்கு பரவுமா?

 

வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்… மனிதர்களுக்கு பரவுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. மேலும் ஒரு அடியாக பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. வட இந்தியாவில் பல பறவைகள் கொத்துக் கொத்தாக விழுந்து இறப்பதும், கோழிப் பண்ணைகளில் கோழி இறப்பது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

மகாராஷ்டிராவில் ஒரு மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் அனைத்தும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை. அதற்காக சாதாரணமாக இருந்துவிட முடியாது. பறவைகள் மூலம் மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்… மனிதர்களுக்கு பரவுமா?

பறவைக் காய்ச்சல் என்றால் என்ன?

இதுவும் வைரஸ் கிருமியால் ஏற்படக் கூடிய பாதிப்புதான். எச்5என்1, எச்7என்9 எனப்படும் இன்ஃபுளுவென்ஸா வைரஸ் கிருமி காரணமாக பறவைகளுக்கு நோய் ஏற்படுகிறது.

நல்ல வேலையாக இந்த காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது. பறவைகளிடமிருந்து மட்டுமே மனிதர்களுக்கு பரவும் என்பதால் எளிதில் நோய்ப் பரவலை கட்டுப்படுத்திவிடலாம்.

அறிகுறிகள் என்ன?

மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு, சுவாசித்தலில் சிரமம், தொண்டை வலி, தசை வலி போன்றவை ஏற்படும்.

சிலருக்கு அதிகப்படியான வாந்தி, குமட்டல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படலாம். ஒரு சிலருக்கு கண்ணில் நோய்த் தொற்று காரணமாக எரிச்சல், சிவந்துபோதல் போன்ற பிரச்னை ஏற்படலாம்.

பறவைக் காய்ச்சல் தொற்றுள்ள பகுதியில் உள்ளவர் அல்லது பறவைக் காய்ச்சல் உள்ள பகுதிக்கு சென்று வந்த பிறகு காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக மனிதர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எனவே, அச்சம் கொள்ள வேண்டியது இல்லை.  நம் ஊரில் இறைச்சியை மிக அதிக வெப்பத்தில் சமைப்பதால் கிருமிகள் அழிந்துவிடும்.

பொதுவாக 70 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் இந்த வைரஸ் கிருமி உயிருடன் இருக்காது. எனவே, முட்டையோ, இறைச்சியோ எதுவாக இருந்தாலும் 70 டிகிரி செல்ஷியசுக்கு மேலான வெப்பத்தில் சமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொற்றுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கோழி உள்ளிட்ட இறைச்சிக்காக கொண்டு வரப்படும் விலங்குகள் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

கோழி பண்ணைகளில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் கோழிகளை கையாள்வது நல்லது.

வெளியே சென்று வந்ததும் கை, கால்களை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுவதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்!