கடந்த அக்டோபரில் டி.வி.எஸ்., ஓலா மற்றும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிப்பு

 
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

கடந்த அக்டோபரில் டி.வி.எஸ்., ஓலா மற்றும் ராயல் என்பீல்டு  ஆகிய நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3,60,288 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 அக்டோபர் மாதத்தை காட்டிலும் 2 சதவீதம்  அதிகமாகும். அந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி மொத்தம் 3,55,033 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 20 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனம் S1 Pro மற்றும் S1 ஆகிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தினந்தோறும் சராசரியாக ஆயிரம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்கிறது.

ராயல் என்பீல்டு

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 82,235 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 86 சதவீதம் அதிகமாகும். 2021 அக்டோபர் மாதத்தில் மொத்தம் ராயல் என்பீல்டு நிறுவனம் 44,133 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.