வர்த்தக துளிகள்... கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு விரைவில் நடவடிக்கை- உணவுத்துறை செயலாளர்

 
கோதுமை மாவு

உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கோதுமை மற்றும் கோதுமை மாவின் சில்லரை விலை அதிகரித்துள்ளதால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும். கோதுமை மற்றம் கோதுமை மாவின் விலையை மத்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் விலையை குறைக்க அனைத்து வாய்ப்புகளும் ஆராயப்பட்டு  வருகிறது என தெரிவித்தார்.

வந்தே பாரத் ரெயில்

எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.1.9 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என தகவல். மோடி அரசாங்கம் வந்தே பாரத் ரயிலுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 500 அரை-அதிவேக  ரயில்கள் மற்றும் 35 ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களும் திட்டத்தில்  சேர்க்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களை வந்தே பாரத் ரயில் மூலம் மாற்றலாம், 2025-26க்கும் ஐரோப்பா, தென்அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்யலாம் என்ற நம்பிக்கை ஆகிய 2 காரணங்களுக்காக வந்தே பாரத் ரயிலுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள மாதாந்திர முக்கிய செய்திகள் அறிக்கையில், பணவீக்கம் குறைந்து வருவதால் இந்தியாவின் பொருளாதாரம்  பெரிய  பொருளாதார ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் கண்டுள்ளது. பொருட்களின் விலையை குறைப்பது நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.7 லட்சம் கோடி டாலராக இருக்கும். 2025ல் சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் நான்காவது இடத்துக்கு இந்தியா முன்னேறும். 2027ல் இந்தியா 5.4 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இருக்கும் போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி சுமார் 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்விக்கி நிறுவனத்தின் தயாரிப்பு, பொறியியல் மற்றும் செயல்பாட்டு பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைக் குறைப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல். இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கு முன்னதாக ஸ்விக்கி நிறுவனம்  லாபகரமாக மாற விரும்பு நேரத்தில் இந்த பணிநீக்கங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.