வர்த்தக துளிகள்... உலகின் 3வது பெரிய பணக்காரான கவுதம் அதானி.. சொத்து மதிப்பு ரூ.11 லட்சம் கோடி

 
கவுதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.11 லட்சம் கோடியாக உள்ளது. இதனையடுத்து உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார். 2020 ஜனவரியில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1000  கோடி டாலராக இருந்தது, தற்போது அதானியின் சொத்து மதிப்பு 13,700 கோடி டாலராக (சுமார் 11 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இந்தியாவில்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டி.சி.எஸ். ஆகிய 2 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டுமே அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பை காட்டிலும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் உணவு பொருட்களின் கடுமையாக உயர்ந்து வருகிறது. உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பினருடன் ஆலோசனை செய்த பிறகு இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்தார்.

நிதிப் பற்றாக்குறை

நம் நாட்டின் நிதி பற்றாக்குறை முதல் 4 மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) ரூ.3.41 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில்  மத்திய அரசின் வருவாய் (கடன் நீங்கலாக) ரூ.7.86 லட்சம் கோடியாக உள்ளது. அதேசமயம் மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.11.27 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் ரூ.3.41 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இது ஆண்டு மதிப்பீட்டில் 20.5 சதவீதமாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

நடப்பு 2022-23ம் நிதியாண்டின்  முதல் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் இது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டான 16.2 சதவீதத்தை காட்டிலும் குறைவாக  உள்ளது. மேலும் இந்திய பொருளாதாரம் ஆண்டுதோறும் 7 சதவீத வளாச்சியை பதிவு செய்யும் எதிர்பார்ப்பை அடைய தவறி விடுமா, உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடருமா? என்ற கேள்வியை கடந்த ஜூன் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் எழுப்பியுள்ளது.