வர்த்தக துளிகள்.. சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.30 வரை குறைத்த அதானி நிறுவனம்..

 
அதானி வில்மர்

சமையல் எண்ணெய் நிறுவனமான அதானி வில்மர் பார்ச்சூன் பிராண்டின் கீழ் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் சமையல் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.30 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. சோயாபீன் எண்ணெய் விலை அதிகபட்சமாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பார்ச்சூன் சோயாபீன் எண்ணெய் விலை (லிட்டருக்கு) ரூ.195-லிருந்து ரூ.165ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் 210-லிருந்து ரூ.199ஆகவும், கடுகு எண்ணெய் ரூ.195-லிருந்து ரூ.190ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையுடன் கூடிய சரக்குகள் விரைவில் சந்தைக்கு வரும் என அதானி வில்மர் தெரிவித்துள்ளது.

வாராக்கடன் தள்ளுபடி…. மோடி ஆட்சியில் தாராளம்…. 4 வருஷத்துல ரூ.7.94 லட்சம் கோடி தள்ளுபடி…

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வாராக்கடன் ஏற்படுவது இயல்பானது இருப்பினும் அது விரும்பத்தகாதது மற்றும் வங்கியின் வணிகத்துடன் தொடர்புடையது. கடந்த 8 நிதியாண்டுகளில் ரூ.8.6 லட்சம் கோடி மதிப்பிலான வாரக்கடன்களை வசூலிக்க அரசு மற்றும் ரிசர்வ்  வங்கியின் உறுதியான நடவடிக்கைகள்  உதவியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தக்காளி செடி

நடப்பு கரிப் பருவத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடுதல் போதுமான அளவில் உள்ளது. இந்த பயிர்கள் சாகுபடி பரப்பளவு  கடந்த ஆண்டை போலவே உள்ளது என்று வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உதாரணமாக, கடந்த 5ம் தேதி நிலவரப்படி, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 முக்கிய உற்பத்தி மாநிலங்களில் வெங்காயம் மொத்தம் 26,840  ஹெக்டேராக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 26,670ஆக இருந்தது என அரசு அதிகாரி தெரிவித்தார்.

பணம்

நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்த ஆண்டில் அதிக கடன் வழங்குவராக இந்தியா உருவெடுத்துள்ளது. இலங்கை நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30 வரையிலான 4 மாதங்களில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 37.69 கோடி டாலர் கடன் வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆசிய மேம்பாட்டு வங்கி 35.96 கோடி டாலர் வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கையுடன் மிகவும் நெருக்கம் காட்டிய சீனாவோ 6.79 கோடி டாலர் மட்டும் அந்நாட்டுக்கு கடன் கொடுத்துள்ளது, உலக வங்கி 6.73 கோடி டாலரும் கடனாக வழங்கியுள்ளன.