வர்த்தக துளிகள்... கடந்த அக்டோபரில் உள்நாட்டு விமானங்களில் 1.14 கோடி பேர் பயணம்..

 
விமானத்தில் பயணிகள்

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  இந்திய விமான சேவை நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் 1.14 கோடி பயணிகளை சுமந்து சென்றுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். 2021 அக்டோபர் மாதத்தில் இந்தியா விமானங்களில் 89.85 லட்சம் பேர் பறந்து சென்று இருந்தனர். 2022 செப்டம்பர் மாதத்தில் 1.03 கோடி பயணிகள் இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களில் சென்று இருந்தனர்.

கூகுள்

பணியாளர்களை நீக்குதலை  பெரிய நிறுவனங்கள் தங்கள் வருவாயை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாகக் கருதுகின்றன. மெட்டா, அமேசான் மற்றும் சிஸ்கோ போன்ற அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அண்மையில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. தற்போது அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் இணைகிறது. கூகுள் நிறுவனம் ஒரு புதிய செயல்திறன் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆயிரக்கணக்கான திறன் குறைவான பணியாளர்களை வெளியேற்றும் என தகவல்.

எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், டிவிட்டர் நிறுவனத்தின் புதிய முதலாளியுமான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 17,000 கோடி டாலராக உள்ளது. 2022ம் ஆண்டில் மட்டும் எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 10,100 கோடி டாலர் குறைந்துள்ளது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பான 8,820 கோடி டாலரை  காட்டிலும் குறைவாகும். 2022 நவம்பரில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 31,500 கோடி டாலரை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

ஆகாசா ஏர்

உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர்,  பெங்களூரு-விசாகப்பட்டிணம் வழித்தடத்தில் தினசரி இரண்டு விமான சேவைகளை தொடங்க உள்ளது. டிசம்பர் 10ம் தேதியன்று பெங்களூருலிருந்து விசாகப்பட்டிணத்துக்கு விமான சேவையை ஆகாசா ஏர் நிறுவனம் தொடங்குகிறது. இது, இந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்டதில் இருந்து ஆகாசா ஏர் விமானத்தின் 10வது பயண இடமாக இருக்கும்.