வர்த்தக துளிகள்.. சூரிய மின் உற்பத்தியால் 6 மாதத்தில் ரூ.35 ஆயிரம் கோடி எரிபொருள் செலவினம் தவிர்ப்பு

 
சூரிய மின் உற்பத்தி

இந்தியாவில் 2022ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான கடந்த 6 மாதங்களில் சூரிய மின் உற்பத்தியின் பலனாக சுமார் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் செலவினம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், 1.94 கோடி டன் நிலக்கரி தேவையும் தவிர்க்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இதே காலத்தில் சூரிய மின்உற்பத்தி பலனாக சுமார் ரூ.2.50 லட்சம் கோடி எரிபொருள் செலவினம் தவிர்க்கப்பட்டுள்ளது என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல் இந்தியா

மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி உற்பத்தியில் ஈடுபடும் வரும் கோல் இந்தியா நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்)  ரூ.7,027 கோடியை மூலதன செலவினமாக மேற்கொண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் (2021 ஏப்ரல்- 2002 செப்டம்பர்)  33 சதவீதம் அதிகமாகும். அந்த அரையாண்டில் கோல் இந்தியா நிறுவனம் மூலதன செலவினமாக ரூ.5,300 கோடியை செலவிட்டு இருந்தது.

ஸ்கோடா ஆட்டோ
 
செக் நாட்டை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ, அடுத்த 12-18 மாதங்களில் இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார் மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் இந்திய மின்சார வாகன சந்தையில் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலில் ஐரோப்பாவிலிருந்து ரெடிமேட் காரை இறக்குமதி செய்து சந்தையை சோதனை செய்ய விரும்புகிறோம் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் பெட்ர் சோல்க்  தெரிவித்துள்ளார்.

அக்சென்ச்சர்

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனமான அக்சென்ச்சரின் இந்தியா பிரிவு அண்மையில் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பல பணியாளர்கள்  நிறுவனத்தில் வேலை பெறுவதற்கு போலி ஆவணங்கள் மற்றும் அனுபவ கடிதங்களை பயன்படுத்தியதை கண்டறிந்ததை அடுத்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் திறனில் எந்த பாதிப்பும் எற்படாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என அக்சென்ச்சர் இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.