இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு

 
பங்கு வர்த்தகம்

பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பி.பி. பின்டெக், சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், எஸ்.ஜே.எஸ். என்டர்பிரைசஸ் மற்றும் ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் தங்களது பங்குகளை பட்டியலிட உள்ளன. டார்சன் புரோடக்ட்ஸ் (நவ.15-17) மற்றும் கோ பேஷன் (நவ.17-22) ஆகிய 2 நிறுவனங்கள் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. நம் நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது மற்றும் சுமார் 112 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம் பிரான்ஸ், ஸ்பெயின், கொலம்பியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்

கடந்த அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம், வர்த்தக பற்றாக்குறை தொடர்பான புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகிறது. நவம்பர் 5ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரங்கள், நவம்பர் 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.  சில பிரபலமான நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளிவருகிறது.

கச்சா எண்ணெய்

சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.