பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுனரால் நேர்ந்த விபத்து!

 

பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுனரால் நேர்ந்த விபத்து!

கடலூர் அருகே தற்காலிக ஓட்டுனரை வைத்து பேருந்தை இயக்கியதால் விபத்து நேர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டிரைக் காரணமாக சென்னையில் மிக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதே நிலை தான் பிற மாவட்டங்களிலும்.

ஊழியர்கள் பணிக்கு வரவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 50%க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கடலூரில் தற்காலிக ஓட்டுனர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டதால் விபத்து நேர்ந்துள்ளது.

பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுனரால் நேர்ந்த விபத்து!

கடலூரில் மட்டும் 4 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், 90% ஊழியர்கள் இன்று பணிக்கு வரவில்லை. அதனால், பணிமனை அதிகாரிகள் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்தை இயக்க முயற்சித்துள்ளனர். கடலூர் அரசு பணிமனையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

அவர் இயக்கிய பேருந்து, அருகில் இருந்து பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது. பணிமனையிலேயே இந்த விபத்து நடந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்காலிக ஓட்டுநர் பேருந்தை இயக்கியதைக் கண்டு ஆத்திரமடைந்த பேருந்து ஊழியர்கள், பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்ததும் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.