தமிழக அரசுக்கு பாமக உறுதியாக துணை நிற்கும் : ராமதாஸ் அறிவிப்பு!

 

தமிழக அரசுக்கு பாமக உறுதியாக துணை நிற்கும் : ராமதாஸ் அறிவிப்பு!

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து விட்டு, அந்த வளாகத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப் பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசு கட்டமைப்பை தனியாரிடம் தாரை வார்ப்பது நியாயமற்றது.

நோயற்ற இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன், தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை செங்கல்பட்டில் அமைக்க 2004 – 09 காலத்தில் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தீர்மானிக்கப்பட்டது. அதற்காக ரூ.594 கோடி நிதியும் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான முக்கியக் காரணம் அரசுக்கு தேவையான தடுப்பூசிகளை இனி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கக் கூடாது; மாறாக அரசே தடுப்பூசிகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் தயாரிக்க வேண்டும் என்பது தான்.

தமிழக அரசுக்கு பாமக உறுதியாக துணை நிற்கும் : ராமதாஸ் அறிவிப்பு!

ஆனாலும், எனக்குப் பிறகு வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டாததால் திட்டப்பணிகள் முடங்கின. ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்கா அமைப்பதற்கான பணிகளில் 90% நிறைவடைந்து விட்டன. இன்னும் சில நூறு கோடிகள் முதலீடு செய்தால், அங்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில், உடனடியாக தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறை அமைச்சர்களுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தேன்.

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாத நிலையில், தடுப்பூசி வளாகத்தை அமைத்த மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியார் நிறுவனங்களோ, பிற அரசுத்துறை நிறுவனங்களோ 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் (மே 21) கடைசி நாள் எனும் நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக தடுப்பூசி வளாகத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் தனியாருக்கு வழங்கப்பட்டால், எந்த நோக்கத்திற்காக அது அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.

தமிழக அரசுக்கு பாமக உறுதியாக துணை நிற்கும் : ராமதாஸ் அறிவிப்பு!

உலகிலேயே அதிக தடுப்பூசி தேவைப்படும் நாடு இந்தியா தான். இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அடுத்த 6 மாதங்களில் 100 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். இதற்கு 200 கோடி டோஸ்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை சுமார் 20 கோடி பேருக்கு மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இன்னும் 180 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப் படுகின்றன. இவற்றுக்காக தனியார் நிறுவனங்களை சார்ந்திருப்பது கால விரயமும், பொருள் விரயமும் ஏற்படுத்தும் செயலாகும். மாறாக, பொதுநலன் கருதி தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான காப்புரிமையை அரசே எடுத்துக் கொண்டு அரசு நிறுவனங்களில் தடுப்பூசிகளை தயாரிப்பது தான் சிறந்த தீர்வாகும்.

அந்த வகையில் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் அல்லது தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திடம் ஆலையை ஒப்படைப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனையை தமிழக அரசு பரிசீலிக்கத் தயங்குவதும், தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதும் ஏன்? எனப் புரியவில்லை.

தமிழ்நாடு அரசு தனியாரிடமிருந்து மூன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றை ஜூலை மாதத்தில் தொடங்கி திசம்பர் மாதத்திற்குள் வினியோகிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, இதற்காக குறைந்தது ரூ.1500 கோடி செலவாகக் கூடும். இந்தத் தொகையைக் கொண்டு செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, தனியாரிடம் வாங்க திட்டமிட்டிருப்பதை விட பல மடங்கு தடுப்பூசிகளை தயாரித்து விட முடியும். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் அடுத்த 3 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க முடியும் என்பதாலும், மாதத்திற்கு 5 கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை விட கூடுதலான தடுப்பூசிகளை 4 மாதங்களில் தயாரித்து விட முடியும்.

தமிழக அரசுக்கு பாமக உறுதியாக துணை நிற்கும் : ராமதாஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளை தயாரிக்க முன்வரும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதற்காக முதலீடு செய்யும் நிதியை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை எடுத்து நடத்துவதற்காக செலவிடுவது தான் பயனுள்ளதாக இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அரசிடம் தான் இருக்க வேண்டும். அது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். ஒவ்வொரு ஆண்டும் 2.9 கோடி கருவுற்ற பெண்களுக்கும், 2.67 கோடி சிசுக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்கு (Universal Immunization Programme – UIP) தேவையான 7 தடுப்பூசிகளையும் இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும், இவ்வளாகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், இந்த தடுப்பூசிகளை தனியாரிடமிருந்து தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அது பெரும் அநீதி ஆகும். அது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.

சென்னை கிண்டியில் தமிழக அரசுக்கு சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் இருப்பதைப், போல செங்கல்பட்டு வளாகமும், தமிழக அரசின் இரண்டாவது தடுப்பூசி உற்பத்தி வளாகமாக செயல்படலாம். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைந்துள்ள 100 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தான் மத்திய அரசுக்கு வழங்கியது என்பதால் அதில் தமிழக அரசுக்கு கூடுதல் உரிமை உள்ளது. எனவே, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து விட்டு, அந்த வளாகத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.