பிரேக் ஃபாஸ்டா, மதிய உணவா… அதிக கலோரி உணவு எப்போது எடுப்பது சரியாக இருக்கும்?

 

பிரேக் ஃபாஸ்டா, மதிய உணவா… அதிக கலோரி உணவு எப்போது எடுப்பது சரியாக இருக்கும்?

இரவு உணவுக்கும் அடுத்த நாள் காலை பிரேக் ஃபாஸ்டுக்கும் இடையே மிக நீண்ட இடைவெளி. இரவு நாம் எடுத்துக்கொண்ட உணவில் இருந்து பெறப்பட்ட கலோரியைக் கொண்டு உடல் இரவு முழுக்க இயங்க வேண்டும். கிட்டத்தட்ட 10 – 12 மணி நேர இடைவெளி என்பதால்தான் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்ணாமல் இருப்பதை முடிப்பதைத்தான் பிரேக் ஃபாஸ்ட் என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

பிரேக் ஃபாஸ்டா, மதிய உணவா… அதிக கலோரி உணவு எப்போது எடுப்பது சரியாக இருக்கும்?

சிலர் காலையில் அதிக உணவு உட்கொள்வார்கள், சிலர் காலையில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு மதிய வேளையில் ஒரு கட்டுக் கட்டுவார்கள். இதில் எது சரி, எது தவறு என்பதை நாம் தெரிந்துகொள்வோம்.

காலையில் அதிக உணவு தேவையா, மதியத்தில் அதிக உணவு தேவையா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு ஒரு நாளைக்கு நமக்கு எவ்வளவு கலோரி தேவைப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நம்முடைய இயக்கம், வளர்சிதை மாற்ற விகிதம் என பல காரணிகள் இந்த கலோரி தேவையை முடிவு செய்கின்றன.

காலை நேரத்தில் அதிக அளவில் உட்கொள்வதைக் காட்டிலும் மதியத்தில் அதிகம் சாப்பிடுவது சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் காலை நேரத்தில் அதிக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர் என்றால் காலையில் சற்று அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதில் தவறும் இல்லை என்கின்றனர்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1200 கலோரி உணவு தேவைப்படுகிறது என்றால் அதை காலையில் 300, மதியம் 400, இரவு 200 என பிரித்துக்கொள்ள வேண்டும். இது மொத்தம் 900 கலோரி வரும். மீதம் உள்ள 300 கலோரி என்பது நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள். இரண்டு உணவு நேரத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் தலா 100 கலோரி வீதம் உணவு எடுத்துக்கொள்ளளாம்.

காலையில் உடற்பயிற்சி செய்பவர் என்றால் காலையில் 400 கலோரியும், மதியம் 300 கலோரியும் எடுத்துக்கொள்ளலாம். என்ன என்றாலும் காலை உணவை எடுப்பதைத் தவிர்க்க வேண்டாம்.

உடல் எடையைக் குறைக்க நினைக்க அனைவரும் செய்யும் தவறு காலை உணவைத் தவிர்ப்பதுதான். காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம் பல கலோரிகள் குறைகிறது. இதனால் வேகமாக உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். உண்மையில் காலை உணவுதான் உடலுக்கு ஆற்றலை வழங்கும் பிரதான உணவாக உள்ளது. காலை உணவைத் தவிர்க்கும்போது அது வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. மனநிலையில் மாற்றம் வருகிறது. அதுவே அடுத்த வேளையில் அதிக உணவு எடுத்துக்கொள்ள, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடுகிறது.