கொரோனா வந்தவர்களையும் விட்டுவைக்காத பிரேசிலின் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்!

 

கொரோனா வந்தவர்களையும் விட்டுவைக்காத பிரேசிலின் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்!

இங்கிலாந்து கொரோனா, ஜப்பான் கொரோனா, தென் ஆப்ரிக்கா கொரோனா, நியூயார்க் கொரோனா என புதிது புதிதாக மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் கிருமிகள் எல்லாம் பழையதைக் காட்டிலும் அதிக வீரியம் மிக்கதாக உள்ளது என்பதுதான் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக உள்ளது.

கொரோனா வந்தவர்களையும் விட்டுவைக்காத பிரேசிலின் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்!

இந்த நிலையில் பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் ஏற்கனவே தொற்றில் இருந்து மீண்டவர்களைக் கூட விட்டுவைப்பது இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரேசிலில் பரவும் புதிய வகை வைரஸ்க்கு பி.1 என பெயரிட்டுள்ளனர். இது ஏற்கனவே கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். இதனால்தான் பிளாஸ்மா மாற்று சிகிச்சை அறிமுகம் ஆனது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பிளாஸ்மா இந்த புதிய வைரஸ் கிருமிக்கு எதிராக மிகக் குறைந்த அளவிலேயே செயல்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படக் கூடிய நன்மையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. கொரோனா பரவாமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. இந்த புதிய வகை தடுப்பூசியால் உருவான நோய் எதிர்ப்பு சக்திக்குக் கட்டுப்படாது என்ற வகையில் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தி லான்சென்ட் மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில், முந்தைய வைரஸ் கிருமிக்கு எதிராக உடலில் உருவான எதிர்ப்பு சக்தி புதிய வைரஸ் கிருமிக்கு எதிராக ஆறு மடங்கு குறைவாக செயல்படுகிறது. இதனால் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நூற்றில் 25 முதல் 60 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே வந்த கொரோனாவுக்கு எதிராக உருவான ஆன்டிபாடியால் புதிய கொரோனாவை எதிர்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் உருவாகும் ஆன்டிபாடி எத்தனை நாட்களுக்குப் பயன் தரும் என்பதற்கு எந்த ஆய்வும் இல்லை. இந்த சூழலில் புதிது புதிதாக வரும் கொரோனா மீண்டும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. கொரோனா பரவல் நம் பகுதியில் நடக்காமல் இருக்க அரசு கூறியது போல சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றுவது ஒன்றே தீர்வு!