திருடிய செல்போனை கொடுக்க வேண்டுமென்றால்… டீல் பேசிய சிறுவன்; விரட்டிபிடித்த சென்னை பெண் இன்ஜீனியர்

 

திருடிய செல்போனை கொடுக்க வேண்டுமென்றால்… டீல் பேசிய சிறுவன்; விரட்டிபிடித்த சென்னை பெண் இன்ஜீனியர்

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கீதபிரியா (28). இன்ஜினீயரிங் படித்த இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் உள்ள பிரபல செல்போன் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். ஊரடங்கு என்றாலும் கீதபிரியாவுக்கு வேலை. அதுவும் பகல் ஷிப்ட். அதனால் அதிகாலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்ட கீதபிரியா, சரியாக 5.50-க்கு வரும் அலுவலக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவர், தனியாக அங்கு நின்றுக்கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் அதிவேகமாக வந்த பைக் ஒன்று கீதபிரியாவை ஊரசி செல்வது போல சென்றது. அந்த பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன், கீதபிரியாவின் கையிலிருந்த செல்போனை லகுவாக பிடுங்கி சென்றுக் கொண்டிருந்தான். அதனால் என்ன செய்வதென்று திகைத்த கீதபிரியா… திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் கீதபிரியாவின் அலறல் சத்தம் மற்றவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லை.

திருடிய செல்போனை கொடுக்க வேண்டுமென்றால்… டீல் பேசிய சிறுவன்; விரட்டிபிடித்த சென்னை பெண் இன்ஜீனியர்

இந்தச் சமயத்தில் அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. உடனே ஆட்டோ டிரைவரிடம் பதற்றத்துடன் கீதபிரியா விவரத்தைக் கூறினார். உடனடியாக ஆட்டோ டிரைவர், செல்போனை பறித்த சந்தோஷத்தில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த சிறுவர்களை ஆட்டோவில் துரத்தினார். செல்போனை பறித்த அசோக்நகர் 11-வது அவென்யூ, கேஎப்சி அருகிலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள கே.கே.நகர் அரசு மருத்துவமனை அருகே வரை சிறுவர்கள் பைக்கில் சென்றிருப்பார்கள். பைக்கை விட வேகமாக ஆட்டோவை ஓட்டிய டிரைவர், சிறுவர்கள் ஓட்டிய பைக்கின் முன் வழிமறித்து ஆட்டோவை நிறுத்தினார். அதனால் பைக்கில் சென்ற சிறுவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்தச் சமயத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கி கீதபிரியா, பைக்கை ஓட்டிய சிறுவனின் சட்டையை லகுவாகப் பிடித்துக் கொண்டார். அதைப்பார்த்த மற்றொரு சிறுவன், செல்போனை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை ஆட்டோ டிரைவர் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்தச் சிறுவன் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்.

இதையடுத்து கீதபிரியா, பிடிப்பட்ட சிறுவனிடம் என்னுடைய செல்போன் எங்கடா என்று கேட்க, அது என்னிடம் இல்லை. தப்பி ஓடிய என்னுடைய ப்ரெண்டுகிட்ட இருக்கு என்று கூறியதோடு அக்கா, என்னை விட்டுங்க, நான் செல்போனை கொடுத்திடுரேன் என்று கெஞ்ச தொடங்கினான். ஆனால், கீதபிரியா, உன்னையெல்லாம் சும்மா விடக்கூடாது, என்னைப் போல எத்தனை பேர்கிட்ட செல்போனை பறிச்சிருப்ப என்று ஆவேசமாக கூறியப்படி ஆட்டோ டிரைவரிடம் போனை வாங்கி காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்து விவரத்தைக் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்தது. அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்த கீதபிரியா, அன்று வேலைக்கு லீவ் போட்டுவிட்டு குமரன்நகர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு தன்னுடைய செல்போனை பறித்துச் சென்றது தொடர்பாக புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிடிப்பட்ட சிறுவனிடம் விசாரித்தனர். விசாரணையில் பைக்கைத்திருடிய சிறுவர்கள், கிண்டியில் ஒருவரிடம் அதிகாலை நேரத்தில் செல்போனை பறித்துள்ளனர். பிறகு கீதபிரியாவிடமும் செல்போனை பறித்துள்ளனர். அப்போதுதான் சிறுவர்களை விரட்டிச் சென்று கீதபிரியா பிடித்தது தெரியவந்தது.

திருடிய செல்போனை கொடுக்க வேண்டுமென்றால்… டீல் பேசிய சிறுவன்; விரட்டிபிடித்த சென்னை பெண் இன்ஜீனியர்
இந்தச் சூழலில் தன்னுடைய செல்போனுக்கு கீதபிரியா, போன் செய்துள்ளார். ரிங் அடித்ததும் எடுத்த சிறுவன், நீங்க யாரு என்று கேட்டுள்ளார். அதற்கு கீதபிரியா, என்னுடைய செல்போனில்தான் நீ பேசுகிறாய். எங்கு இருக்கிறாய். மரியாதையாக என்னுடைய செல்போனை கொடுத்துவிடு என்று கூறியுள்ளார். அதற்கு சிறுவனும், என் ப்ரெண்டை நான் சொல்லும் இடத்துக்கு அழைத்துவாருங்கள். அங்கு உங்களின் செல்போனைக் கொடுத்துவிடுகிறேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று கூறியுள்ளான். அதைக்கேட்ட கீதபிரியா, உன் ப்ரெண்ட் இப்போ காவல் நிலையத்திலிருக்கிறான். நீயும் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்துவிடு என்று கீதபிரியா கூறியதும் செல்போன் இணைப்பை சிறுவன் துண்டித்துவிட்டான். இந்தத் தகவலையும் கீதபிரியா, குமரன் நகர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தார். செல்போன் சிக்னல் மூலம் அவனையும் போலீசார் பிடித்தனர். அவனிடமிருந்த கீதபிரியாவின் செல்போனை பறிமுதல் செய்தனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் போலீசார் சேர்த்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், பைக் ஆகியவற்றை சட்டப்படி கீதபிரியா உள்பட சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நடுரோட்டில் செல்போனை பறித்துச் சென்ற சிறுவனை தைரியமாக துரத்திச் சென்று பிடித்த இன்ஜினீயர் கீதபிரியா குறித்த தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தெரியவந்தது. உடனே கீதபிரியாவை அவர் நேரில் வரவழைத்தார். அப்போது என்ன நடந்தது என்று கீதபிரியாவிடம் விவரம் கேட்டறிந்த கமிஷனர், உங்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். பொதுவாக செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள் பதற்றத்தில் என்ன செய்வதென்று திகைத்துப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வண்டியின் பதிவு நம்பரை நோட் பண்ணுவார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலாக ஆட்டோவில் சென்று சிறுவனைப் பிடித்துபோலீஸிடம் ஒப்படைத்துள்ளீர்கள். உங்களைப் போலதான் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்று கூறிய 1000 ரூபாய் பரிசு தொகையும் புத்தகம் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். கமிஷனருக்கு தேங்க்ஸ் கூறிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் கீதபிரியா.

திருடிய செல்போனை கொடுக்க வேண்டுமென்றால்… டீல் பேசிய சிறுவன்; விரட்டிபிடித்த சென்னை பெண் இன்ஜீனியர்

அவரிடம் என்ன நடந்தது என்று போனில் விசாரித்தோம். நான், ஓரகடத்தில் உள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன். டூயூட்டிக்கு செல்ல ஆபீஸ் பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது என்னுடைய 15,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை இடது கையில் வைத்திருந்தேன். அப்போது என்னைக் கிரஸ் பண்ணி போன பைக்கிலிருந்த சிறுவன், செல்போனை பிடுங்கிக் கொண்டு சென்றான். நான், அவனைப் பிடிக்க வேண்டும் என யோசித்தேன். அப்போதுதான் அங்கு வந்த ஆட்டோ டிரைவர் மாணிக்கம் அங்கிளிடம் விவரத்தைக் கூறினேன். அவரும் பைக்கை விரட்டிக் கொண்டு சென்றார். ஒரு கி.மீட்டர் தூரத்தில் பைக்கை மடக்கினோம். பைக்கை ஓட்டிய சிறுவனின் சட்டையை நான் பிடித்துக் கொண்டோம். டிரைவர் அங்கிள் இன்னொரு சிறுவனைப் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவன் ஓடிவிட்டான். நான் பிடித்த சிறுவனின் சட்டை பையிலிருந்து 2 செல்போன்கள் விழுந்தன.

ஆனால் அதில் என்னுடைய செல்போன் இல்லை. அப்போது அந்தச் சிறுவனிடம் கேட்டபோது என்னுடைய செல்போன் தப்பிய ஓடியவனிடம் இருப்பது தெரியவந்தது. காவல் நிலையத்தில் சிறுவனை ஒப்படைத்தேன். பிறகு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் பிடித்து என்னுடைய செல்போனை மீட்டுவிட்டனர். ஆனால் இன்னும் செல்போன் என் கைக்கு வரவில்லை. நீதிமன்றத்தின் மூலம் செல்போனை வாங்கி கொள்ளும்படி போலீசார் தெரிவித்துள்ளனர். செல்போனை பிடுங்கி செல்பவர்களை தைரியமாக விரட்டிச் சென்றால் எளிதில் பிடித்துவிடலாம். செல்போனை பறித்தவுடன் பதற்றமடையால் சமயோகிதமாக செயல்பட வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் செல்போனை வாங்கினேன். என்னுடைய செல்போன் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

எஸ்.செல்வம்