பயணிகளுக்கு 64.49 கோடி ரிபண்ட் தெற்கு ரயில்வே தகவல்

 

பயணிகளுக்கு 64.49 கோடி ரிபண்ட் தெற்கு ரயில்வே தகவல்

ஜூன், ஜூலை மாதங்களில் பயணிகளுக்கு ரூ.64.49 கோடி கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டு விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாராதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில், விமான சேவைகள் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடர்கிறது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம் பயண தேதியில் இருந்து 6 மாத காலத்துக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரெயில்வே வாரியம் அறிவித்தது. அதன்படி அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு ரெயில்வேயில் ஜூன் மாதம் ரூ.43.77 கோடி, ஜூலை மாதம் ரூ.20.72 கோடி என மொத்தம் ரூ.64.49 கோடி டிக்கெட் முன்பதிவு கட்டணம் 11 லட்சத்து 97 ஆயிரம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இதில், சென்னை கோட்டத்தில் ரூ.27.10 கோடியும், மதுரை கோட்டத்தில் ரூ.6.81 கோடியும், சேலம் கோட்டத்தில் ரூ.7.44 கோடியும், திருச்சி கோட்டத்தில் ரூ.5.13 கோடியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் ரூ.11.13 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் ரூ.6.85 கோடியும் வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.