போட்கிளப் பகுதிக்கு அந்நியர்கள் நுழையத் தடை விதிக்க கோரிக்கை! – புதிய தீண்டாமை என்று மக்கள் கொந்தளிப்பு

 

போட்கிளப் பகுதிக்கு அந்நியர்கள் நுழையத் தடை விதிக்க கோரிக்கை! – புதிய தீண்டாமை என்று மக்கள் கொந்தளிப்பு

சென்னையில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் போட் கிளப் பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் நுழையாமல் இருக்க கேட் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை போட் கிளப் பகுதி என்பது கோடீஸ்வரர்கள் வாழும் பகுதியாகும். மிகப்பெரிய பங்களாக்கள், பெரிய பெரிய கேட், ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான சாலை என்று பெயர் பெற்றது. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், முருகப்பா குழுமம் வெள்ளையன், எம்.ஆர்.எஃப் அதிபர், சன்டிவி கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் இங்குதான் வசிக்கின்றனர். தற்போது இந்த சாலையை மற்றவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கும் வகையில் பிரம்மாண்ட கேட் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது மற்றவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்கிளப் பகுதிக்கு அந்நியர்கள் நுழையத் தடை விதிக்க கோரிக்கை! – புதிய தீண்டாமை என்று மக்கள் கொந்தளிப்புபோட் கிளப் குடியிருப்போர் நல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், போட் கிளப் பகுதியில் முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் நுழைந்து வாங்கிங், ஜாகிங் செய்கிறார்கள். இவர்களால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பிரதான சாலை இணைப்பில் கேட் வைத்து செக்யூரிட்டிகளை நியமித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சட்டப்படி இப்படி செய்ய முடியாது. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் எப்படியும் அமைச்சர்கள், முதல்வரை சந்தித்து அனுமதி பெற்று கேட் அமைத்துவிட வேண்டும் என்று போட் கிளப் குடியிருப்போர் நல சங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் இடங்களில் மிகப்பெரிய சுவர் கட்டி, மிகப்பெரிய இரும்பு கேட் அமைத்து, ஏராளமான செக்யூரிட்டிகளை நியமித்திருக்கிறார்கள். அது அவர்கள் உரிமை. சாலை என்பது பொது மக்கள் பயன்பாட்டுக்காக உள்ளது. அரசு நிலத்துக்கு இவர்கள் எப்படி உரிமை கோரலாம். தடுப்பு சுவர், கேட் அமைக்க வேண்டும் என்று கோரியிருப்பதே நவீன தீண்டாமை என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், போட் கிளப் பகுதியில் வசிப்போரின் கோரிக்கையை நிராகரித்த மாநகராட்சி கமிஷனருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.