சங் பரிவாரங்கள் கொடுத்த அழுத்தம்… திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்பனை செய்யும் முடிவை கைவிடத் திட்டம்!

  0
  26

  ஆந்திராவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய சொத்துக்களை விற்பனை செய்வது என்ற முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அதிக அழுத்தம் காரணமாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு இந்த முடிவை திரும்பப் பெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


  ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை ஏழுமலையான் கோவிலின் பெயருக்கு எழுதி வைத்துள்ளனர். இப்படி நாடு முழுவதும் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்வது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. முதல் கட்டமாக தமிழகத்தில் 23 ஊர்களில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது.
  இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ள சங் பரிவார் அமைப்புகள் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பக்தர்கள் கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்வது என்பது இந்து மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது என்று அவை போர்க்கொடி உயர்த்தின. திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்பனை செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தி வருகின்றன. இந்து அமைப்புக்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக சொத்துக்களை விற்பனை செய்யும் முடிவை மாநில அரசு கைவிட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் குழு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

  கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரான பிறகு அம்மாநிலத்தில் இந்து மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவிட்டதாக சங்பரிவாரங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் சொத்துக்களை விற்பனை செய்யும் முடிவில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி பின்வாங்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.