#PettaUpdate: படப்பிடிப்பு முடிந்தது-ரஜினிகாந்த் ட்வீட்

    0
    2
    petta

    பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

    சென்னை: பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோம சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். முதன்முறையாக ரஜினியின் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங், டேராடூன், லக்னோ ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ரஜினியின் படங்களிலேயே மிக வேகமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதைவிட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளது. படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு உள்பட படக்குழு அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.