5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சொர்க்கத்திலிருந்து வரவில்லை- பிரனாப் முகர்ஜி தாக்கு…..

  0
  1
  பிரனாப் முகர்ஜி

  முந்தைய அரசுகளின் வலுவான அடித்தளத்தால்தான் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைய முடிகிறது. அது சொர்க்கத்தில் இருந்து வரவில்லை என மோடி தலைமையிலான அரசுக்கு குட்டு வைத்தார் முன்னாள் நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி.

  முன்னாள் நிதியமைச்சரும்,  குடியரசு தலைவருமான பிரனாப் முகர்ஜி அதிரடி கருத்துக்கு பெயர் போனவர். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரனாப் முகா்ஜி பேசுகையில் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையின் போது 2024ல் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டும் என்று கூறினார். அது சொர்க்கத்தில் இருந்து வரவில்லை. அதற்கு பிரிட்டிஷ்காரர்கள் வலுவான அடித்தளம் போடவில்லை. சுதந்திர அடைந்த பிறகு இந்தியர்கள் போட்ட வலுவான அடித்தளமே அதற்கு காரணம்.

  ஜவஹர்லால் நேரு

  காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியை குறை சொல்லுபவர்கள் சுதந்திரம் அடைந்த போது நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட பூஜ்யமாக இருந்தது. அதனை 1.8 லட்சம் கோடி டாலராக உயர்த்தியதால் தற்போது 5 லட்சம் கோடி டாலராக உருவாக்க முடிகிறது.

  முன்னாள் பிரதமர் நேரு மற்றும் மற்றவர்களால் ஐஐடி, இஸ்ரோ, ஐஐஎம், வங்கி நெட்வொர்க் நிறுவப்பட்டதால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவ் ஆகியோர் பொருளாதாரத்தை தாரளமயமாக்கிய போது அதற்கு அடித்தளம் கட்டப்பட்டது. இதனால்தான் இன்று நிதியமைச்சரால் 5 லட்சம் கோடி பொருளாதார பலத்தை எட்டுவோம் என்று கூற முடிகிறது. 

  மன்மோகன் சிங், நரசிம்ம ராவ்

  இந்திய பொருளாதார வளர்ச்சியில் மற்றவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. ஆனால் நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் போட்டவர்கள் யார் என்றால் திட்டமிட்ட பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் தற்போது திட்டகமிஷன் கலைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.