5 ஆயிரம் பேர் போவாங்கன்னு நினைச்சா போனது 130 பேர் தானாம்! காத்து வாங்கும் கர்தார்பூர் வழித்தடம்

  0
  2
  தர்பார் சாஹிப் குருத்வாரா

  கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு தினமும் 5 ஆயிரம் யாத்ரீகர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று 130 மட்டுமே அந்த வழியாக குருத்வாராவுக்கு சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த சனிக்கிழமையன்று கர்தாபூர் வழித்தடம் இரு நாடுகளிலும் திறந்து வைக்கப்பட்டது. அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாய் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பிரபலங்கள் அன்று கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று வந்தனர்.

  கர்தார்பூர் வழித்தடம்

  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முதல் சாதரண யாத்ரீகர்கள் கர்தார்பூர் வழித்தடத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர். அன்று 229 பேர் கர்தார்பூர் வழித்தடம் வழியாக தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு சென்று வந்தனர். ஆனால் நேற்று 130 யாத்ரீகர்கள் மட்டுமே அந்த வழித்தடத்தை பயன்படுத்தியுள்ளனர். தினமும் 5 ஆயிரம் கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே யாத்ரீகர்கள் அந்த பாதையை பயன்படுத்தி இருப்பது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

  தர்பார் சாஹிப் குருத்வாரா

  பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லாதது, பாகிஸ்தான் சுமார் ரூ.1,400 கட்டணம் வசூலிப்பது, இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு சீராக இல்லாமல் இருப்பது போன்றவை கர்தார்பூர் வழித்தடத்தில் குறைவான யாத்ரீகர்கள் செல்வதற்கு காரணம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், கடந்த 2 நாட்களாக இந்திய பகுதியிலிருந்து பைனாகுலர் வாயிலாக தர்பார் சாஹிப் குருத்வாராவை தரிசனம் செய்வோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. முன்பு தினமும் சரசாசரியாக 250 பேர் மட்டுமே பைனாகுலர் வாயிலாக அந்த குருத்வாராவை தரிசனம் செய்து வந்தனர்.