4 நாள்தான்…. ஆனால் அடி மரண அடி….. ரூ.15 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 3,473 புள்ளிகள் வீழ்ச்சி…

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் நடைபெற்ற 4 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 3,473 புள்ளிகள் சரிந்தது.

  ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒட்டு மொத்தத்தில் இரண்டு நாட்கள் ஏற்றத்தையும், 2 தினங்கள் கடும் சரிவையும் பங்கு வர்த்தகம் சந்தித்தது. உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் மற்றும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவை பங்கு வர்த்தகத்தின் சரிவுக்கு முக்கிய காரணம்.

  தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ்

  நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.129.43 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 4 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.14.86 லட்சம் கோடியை இழந்தனர். கடந்த 6ம் தேதியன்று நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.29 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது.

  பங்கு வர்த்தகம்

  இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,473.14 புள்ளிகள் குறைந்து 34,103.48 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1,034.25 புள்ளிகள் வீழ்ந்து 9,955.20 புள்ளிகளில் நிலைகொண்டது.