28 ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கிய எஸ்.பி.ஜி.! நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய சோனியா காந்தி

  0
  7
  சோனியா காந்தி

  28 ஆண்டுகளாக தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கிய எஸ்.பி.ஜி.க்கு (சிறப்பு பாதுகாப்பு குழு) நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு காலத்தை, அச்சுறுத்தலின் அளவை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யலாம் என திருத்தம் கொண்டு வந்தது.

  எஸ்.பி.ஜி. பாதுகாப்பு

  ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும், எஸ்.பி.ஜி.யின் சீரான நடைமுறைக்கு சோனியா காந்தி குடும்பத்தினர் தடையாக உள்ளதாக புகார் வந்ததையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் அவர்களுக்கு இசப் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

  சோனியா காந்தி குடும்பத்தினர்

  இதனைதொடர்ந்து, தனது குடும்பத்தினருக்கு 28 ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கி வந்த எஸ்.பி.ஜி.க்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண் குமார் சின்ஹாவுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், கடந்த 28 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும், எஸ்.பி.ஜி. எங்களை பாதுகாக்கும்போது, எஸ்.பி.ஜி.யின் தோல்வியற்ற உயர் தொழில்முறை, கடமைக்கான அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். எனது முழு குடும்பத்தின் சார்பாக, எங்களது பாதுகாப்பை கவனித்து கொள்வதற்கும், அர்ப்பணிப்பு, விவேகம் மற்றும் தனிப்பட்ட கவனிப்புடன் இருப்பதற்கும் எஸ்.பி.ஜி.க்கு எங்களது ஆழ்ந்த பாரட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனது மகனும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தியும் எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்தற்கு எஸ்.பி.ஜி. நன்றி தெரிவித்துள்ளான் என குறிப்பிட்டு இருந்தார்.