200 ரூபாய் கடன், 30 வருடங்கள்,4600 கிலோமீட்டர் தூரம்!

  0
  2
  30 Years reunion

  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படிப்பதற்கு இந்தியா வந்து, பகுதிநேரமாக வேலைப்பார்த்து, வாடகைத்தரக்கூட பணம் இல்லாமல் இருக்கும்போதும் ரிச்சர்டுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார் காசிநாத்.

  1985 முதல் 1989வரை மஹாராஷ்ட்ரா, அவுரங்காபாத்தில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் கென்ய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி. முப்பது வருடங்களுக்கு முன்பு இங்கே தங்கி கல்லூரிப்படிப்பை முடித்தவர் தற்போது, இந்தியாவிற்கு வந்திருக்கும் கென்ய எம்.பிக்கள் குழுவில் ஒருவர். அவர் இந்தியா வந்திறங்கியதில் இருந்து அவுரங்காபாத் செல்வதையே நோக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஒருவழியாக அவுரங்காப்பாத் சென்று சேர்ந்ததும் அவருக்கும் இடம் வலம் புரியவில்லை. காரணம், முப்பது வருடங்களில் அவுரங்காபாத் பலவகைகளில் முன்னேறி இருக்கிறது. ஆனாலும், மனம் தளர விடாமல் குறிப்பிட்ட முகவரியை தேடிக் கண்டுபிடிக்கிறார்.

  Richard Tongi

  பலகட்ட முயற்சிக்குப்பிறகு அவர் தேடி கண்டுபிடித்து, அவர் முன் போய் நிற்கிறார். அவர் காசிநாத் காவ்லி, முப்பது வருடங்களுக்கு முன்பு மளிகைக்கடை வைத்திருந்தவர். முப்பது வருடங்களுக்கு முன்பு மளிகைக்கடை வைத்திருந்தவரை கென்ய நாட்டு எம்.பி. எதற்காக வலைவீசி தேடவேண்டும்? அப்படி தேடிக்கண்டுபிடித்தும், காசிநாத்துக்கு ரிச்சர்டை அடையாளம் தெரியவில்லை. ரிச்சர்ட் ஒரு அடி முன்னே சென்று காசிநாத்திடம் சொல்கிறார், “என்னை தெரியலையா பைய்யா, படிப்பு முடித்துவிட்டு நான் கென்யா திரும்பும்போது எனக்கு நீங்கள் தந்த 200 ரூபாய் கடனை திருப்பித்தந்த உங்கள் ரிச்சர்ட்” என்று சொல்லியிருக்கிறார்.

  Richard - Kasinath

  வாரி அணைத்திருக்கிறார் காசிநாத். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படிப்பதற்கு இந்தியா வந்து, பகுதிநேரமாக வேலைப்பார்த்து, வாடகைத்தரக்கூட பணம் இல்லாமல் இருக்கும்போதும் ரிச்சர்டுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார் காசிநாத். பல‌ சமயங்களில் வாடகை கொடுக்கக்கூட பணம் இருக்காது, சமைக்க சமையல் பொருள்களும் இருக்காது. அப்போதெல்லாம் உணவுப்பொருள்களைக் கடனாகக் கொடுத்து காசிநாத் உதவியிருக்கிறார். ‘ரிச்சர்டால் வாடகை கொடுக்கும்போது வாங்கிக்கொள்ளுங்கள், படிக்கும் மாணவரை நெருக்க வேண்டாம்’ என்று தெரிந்தவர்களிடத்தில் கூறி வாடகை வீடு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். படிப்பு முடிந்து எல்லா கடனையும் சரிகட்ட நினைத்தாலும், ரிச்சர்ட் இன்னும் 200 ரூபாய் தரவேண்டியிருந்தது காசிநாத்துக்கு.

  Richard - Kasinath

  இப்போது போல செல்போன்கள் இல்லாத காலம். எனவே, ரிச்சர்டால் தொடர்ச்சியாக காசிநாத்துடன் தொடர்பில் இருக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் தொடர்பே இல்லாமல் போக, முப்பது வருடங்களுக்குப் பிறகு கென்யாவின் அரசுமுறை பயணியாக, எம்.பியாக இந்தியா வந்திறகியவுடன் காசிநாத்தை தேடி கண்டுபிடித்து நெகிழ்ந்திருக்கிறார் ரிச்சர்ட். மறக்காமல் தான் கொடுக்கவேண்டிய கடனான 200 ரூபாய்க்கும் பல மடங்கு கூடுதலாக சேர்த்து ஒரு பணக்கட்டை காசிநாத்திடம் நீட்டியிருக்கிறார். அந்தப்பணத்தை காசிநாத் வாங்கியிருப்பார்னா நினைக்கிறீங்க?