14 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு பாதியில் நிறுத்திய மருத்துவ படிப்பை முடித்த கர்நாடக இளைஞர்….

  17
  சுபாஷ் துக்காராம் பாட்டீல்

  கர்நாடகாவில் மருத்து கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, செய்த கொலை குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவதித்த இளைஞர் ஒருவர் 14 ஆண்டுகள் கழித்து பாதியில் நிறுத்திய மருத்துவ படிப்பை நிறைவு செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

  கர்நாடக மாநிலம் அப்சல்புர் தாலுகாவில் பாசாகி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் துக்காராம் பாட்டீல். 2002ல் இவர் கலாபுராகியில் உள்ள மகாதேவேப்ப ராம்பூர் மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திருமணமான பெண் ஒருவரை அவர் காதலித்து வந்தார். அந்த பெண்ணின் தூண்டுதலால் அவளது கணவரை சுபாஷ் கொலை செய்தார். இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 

  சுபாஷ் துக்காராம் பாட்டீல்

  2016 ஆகஸ்ட் 15ல் நன்னடத்தை காரணமாக தண்டனை காலத்துக்கு முன்பாகவே சுபாஷ் விடுதலை செய்யப்பட்டார். சிறையை விட்டு வெளியே வந்த சுபாஷ் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் சிறப்பு அனுமதி பெற்று 2016ல் மீண்டும் தனது பழைய மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். 2019ம் ஆண்டு முதல் பசவேஷ்வர் மருத்துவமனையில் கட்டாய ஒரு வருட ஹவுஸ்மேன்ஷிப் மேற்கொண்டு வந்தார். இந்த மாத தொடக்கத்தில்தான் அதனை நிறைவு செய்தார். நேற்று கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் எம்.பி.பி.எஸ். சான்றிதழை பெற்றார்.

  சுபாஷ் துக்காராம் பாட்டீல்

  சுபாஷ் துக்காராம் பாட்டீல் இது குறித்து கூறுகையில், சமூகத்துக்கு குறிப்பாக சிறைகைதிகள் மற்றும் ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு சேவையாற்ற உறுதி ஏற்றுள்ளேன். சிறையில் உள்ள லைப்ரரியில் அதிகம் நேரம் செலவிட்டேன் மற்றும் படிப்பின் மீதான ஆர்வத்தை நான் ஒருபோதும் இழக்கவில்லை என தெரிவித்தார். எம்.ஆர்.எம்.சி. டீன் உமேஷ்சந்திரா கூறுகையில், சுபாஷ் தனது சக மாணவர்களை காட்டிலும் 14 ஆண்டுகள் மூத்தவர். இருப்பினும் தனது படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார் என தெரிவித்தார்.