1,100 வேஸ்ட் பிளாஸ்டிக், டயர்களை பயன்படுத்தி அழகான கார்டன்- வன சரக அதிகாரிக்கு குவியும் பாராட்டு

  0
  1
  பிறகடா வனசரக அலுவலக தோட்டம்

  மேற்கு வங்கத்தில் வன சரக அதிகாரி ஒருவர் 1,100 வேஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ரப்பர் டயா்களை பயன்படுத்தி அழகான தோட்டத்தை (கார்டன்) உருவாக்கியுள்ளார். இதனை பார்க்கும் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

  மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பிரிவின்கீழ் உள்ளது பிறகடா வனசரக பகுதி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியின் வனசரக அதிகாரியாக  பாபன் மொஹந்தா நியமனம் செய்யப்பட்டார். அவர் வனசரக அலுவலகத்தின் இடத்தில் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் டயர்களை பயன்படுத்தி அழகான தோட்டத்தை உருவாக்கியுள்ளார். அந்த வனசரகத்துக்கு வரும் மக்கள் அந்த தோட்டத்தை பார்த்து வியப்படைந்து போபன் மொஹந்தாவை பாராட்டி வருகின்றனர்.

  வனசரக அதிகாரி பாபன் மொஹந்தா

  வனசரக அதிகாரி பாபன் மொஹந்தா இது தொடர்பாக கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியின் வனசரக அதிகாரியாக வந்தேன். நான் இங்கு வந்த போது ஒரே கழிவுகளாக கிடந்தது. அந்த இடத்தில் அழகான தோட்டத்தை உருவாக்க முடிவு செய்தேன். இதனையடுத்து தினமும் எனது பணி நேரத்தை முடித்து விட்டு தோட்டத்தை உருவாக்கும் வேலையை செய்ய தொடங்கினேன். 

  பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான தோட்டம்

  கடந்த 4 ஆண்டுகளில் 1,100 வேஸ்ட் பாட்டில்கள் மற்றும் டயர்களை பயன்படுத்தி அழகான தோட்டத்தை உருவாக்கியுள்ளேன். குளிர்காலங்களில் பெட்டுனியா நட்டேன். தற்போது அவை அங்கு சீசன் மலர்களாக உள்ளது. மக்கள் இங்கு வந்து பார்வையிட்ட பிறகு பாராட்டும்போது நான் நல்லதாக உணருகிறேன். மேலும், மக்கள் என்னை உத்வேகமாக எடுத்துக்கொள்ளும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

  வனசரக அலுவலக தோட்டம்

  இந்த தோட்டத்தை பார்வையிட்ட அருகில் உள்ள பள்ளிகள் இந்த முறையை பின்பற்றுகின்றன. மேலும் அருகில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்களும் இதனை பின்பற்றுகின்றனர். எதிர்காலத்தில் பூமி பாதுகாப்பது, பிளாஸ்டிக்கை மறுஉருவம் செய்வது எப்படி என்பதை இந்த தோட்டத்தின் வாயிலாக நாம் கற்று கொள்ளலாம். பள்ளிகள் அல்ல சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த செய்தி பரவினால் இது பெரிய இயக்கமாக மாறும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.