வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்… அதேசமயம் நியாமான வருமானம் கிடைப்பதாக அது இருக்கணும் – என்.ஆர். நாராயண மூர்த்தி

  0
  5
  என்.ஆர். நாராயண மூர்த்தி

  நியாமான வருமானம் வழங்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலே சமத்துவமின்மை பிரச்சனையை தீர்க்க முடியும் என என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

  ஐ.ஐ.டி. பாம்பே ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான என்.ஆர். நாராயண மூர்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். நியாமான வருமானம் அளிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளில் சமத்துவமின்மையை குறைக்க முடியும். 

  வேலைவாய்ப்பு

  நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் அல்லது 65 கோடி பேர் வேளாண் துறையில் உள்ளனர். ஆனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்துறையின் பங்களிப்பு வெறும்14 சதவீதம் மட்டுமே. இதை வேறுவிதமாக சொல்வது என்றால், இந்தியர்களின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் 2 ஆயிரம் டாலர். அதேசமயம் வேளாண் துறையில் இருப்பவர்களின் தனிநபர் ஆண்டு வருமானம் 500 டாலர்தான். ஏனென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதம் மட்டுமே பங்களிப்பு கொண்ட ஒரே துறையில் 58 சதவீத மக்கள் இருப்பதுதான். 

  வேளாண் துறை

  நாள் ஒன்றுக்கு வேளாண் துறையினர் 1.5 டாலர் அல்லது ரூ.100 சம்பாதிக்கின்றனர். இந்த வருமானத்தை கொண்டு உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கு கல்வி, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால்தான் இந்தியாவில் ஏழ்மை அதிகமாக உள்ளது. அதனால் வேளாண் துறையிலிருந்து தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்பு துறைக்கு அதிகளவில் மக்களை மாற்ற  வேண்டும்.. அப்படி செய்தால் அவர்களுக்கு ஆண்டு வருமானம் 1500-2000 டாலர் வரை கிடைக்கும். அதேசமயம் வேளாண் துறையின் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் மற்றும் அதிக தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

  தயாரிப்பு துறை

  துரதிர்ஷ்டவசமாக இந்த மாற்றங்களை செய்வதில் நம் நாடு  வெற்றி பெறவில்லை. ஏனென்றால் நம் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளது மற்றும் மாநில அரசுகளும் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவில்லை. தொழில் முனைவோருக்கு குறைந்த தொழில்நுட்ப உற்பத்தி மற்றும்  சேவைகளில் ஈடுபடுவதற்கான வாழ்க்கையை அரசுகள் எளிதாக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.