விராட் கோலி அசத்தல் சதம்; 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

  0
  4
  viratkohli

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

  அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

  இதையடுத்து, இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்றது. தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்களும், சமன் செய்யும் பொருட்டு இந்திய அணி வீரர்களும் களமிறங்கினர்.

  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழபிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

  ஆஸ்திரேலிய தரப்பில் ஷான் மார்ஷ் 131 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

  இதனைத் தொடர்ந்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் ஷர்மா 43 (52), தவான் 32 (28) மற்றும் அம்பத்தி ராயுடு 24 (36) ரன்கள் எடுத்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, சதமடித்தார். அதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 39-வது சதத்தை அவர் பூர்த்தி செய்தார்.

  விராட் கோலி 112 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், முன்னாள் கேப்டன் தோனி பொறுப்புடன் நின்று, அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியாக 49.1-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய  அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.